Published : 03 May 2020 02:30 PM
Last Updated : 03 May 2020 02:30 PM

150 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முகம்தெரியாத மனிதர்கள் 80 பேர்: மதுரையில் ‘படிக்கட்டுகள்’ அமைப்பின் கரோனா நிவாரண சேவை

மதுரை

மதுரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் கைகோத்து ‘படிக்கட்டுகள்’ என்ற அமைப்பை இயக்கி வருகிறார்கள். ஆண்டு முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களைத் தேடித் தேடிப் போய் உதவி வரும் இந்த அமைப்பினர், கரோனா காலத்திலும் கருணைக்கரம் நீட்டியிருக்கிறார்கள்.

மதுரையில் தத்தனேரி, கணேசபுரம் பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு கரோனா காலத்து நிவாரண உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஒரு வார காலமாக ‘படிக்கட்டுகள்’ அமைப்பின் இளைஞர்கள் நிதி திரட்டி வந்தார்கள். இப்படி திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சுமார் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் பேசிய ‘படிக்கட்டுகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார், “செய்யும் உதவியை செம்மையாக செய்ய வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டோம். அதன்படி, தத்தனேரி பகுதியில் உள்ள 150 குடும்பங்களைக் கணக்கெடுத்து, ஒரு குடும்பத்துக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் திட்டமிட்டோம். இதற்காக எங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.

இந்த நிதியைத் திரட்டுவதற்காக, எங்கள் அமைப்பில் இருப்பவர்கள் தங்களது முகநூல் பக்கங்களில் தகவல்களைப் பதிவிட்டார்கள். ஒரு நபரோ, அல்லது இரண்டு நபர்கள் இணைந்தோ ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து ஸ்பான்சர் செய்ய முன்வரலாம் என்று சொன்னோம். எங்களின் கோரிக்கையை ஏற்று ஒரே வாரத்தில் 80 நண்பர்கள் ஒன்றிணைந்து 150 குடும்பங்களுக்கும் தேவையான ஒன்றரை லட்ச ரூபாயைத் தந்துவிட்டார்கள்.

இதையடுத்து, அரிசி மற்றும் எண்ணெய் , கோதுமை மாவு, சுண்டல், மசாலா பொருட்கள், பயறு வகைகள் உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் கொண்ட பேக் தயார் செய்யப்பட்டு தத்தனேரி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள 30 குடும்பங்களுக்கும், கணேசபுரம் பகுதியில் உள்ள 120 குடும்பங்களுக்கும் வழங்கினோம்.

கரோனா தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காக தன்னார்வலர்கள் முகக்கவசம், கையுறைகள் சகிதம் பொருட்களை விநியோகித்தனர். உதவிபெற வந்த மக்களும் தனிமனித விலகலைக் கடைப்பிடித்து முகக்கவசம், கையுறைகள் அணிந்துவந்து பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.
இந்தப் பணியை முழுமையாகச் செய்துமுடிக்க எங்கள் அமைப்பினர் கடந்த ஒருவாரகாலமாக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

நிவாரண உதவிகளைப் பெற்றுச் சென்ற மூதாட்டி ஒருவர், ‘தம்பிகளா .. நாங்க எல்லாம் பழைய பாட்டிலை எடைக்குப் போட்டு, அன்னாடம் பொழப்பப் பாக்குறவங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிச்சுட்டு வரதே எங்களுக்கு குதிரைக் கொம்புதான். இந்த மாதிரி நேரத்துல மகராசன்கள் எங்களுக்கு பசிப்பிணி போக்க இம்புட்டு பொருட்களை கொண்டாந்துருக்கீங்க. உங்க குடும்பம் குட்டிக எல்லாம் நல்லா இருக்கணும்யா’ன்னு சொன்னப்ப, எங்களுக்கு இருந்த ஒருவார களைப்பு காணாமப் போயிருச்சு.

இந்த விஷயத்தில் நாங்கள் அணிலாகத்தான் இருந்திருக்கிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நிதி உதவி அளித்த அத்தனை நண்பர்களுக்கும், முகம் தெரியாத கொடையாளர்களுக்கும் கைகூப்பி நன்றியைக் காணிக்கையாக்குகிறோம். அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தச் சேவைக்காக திரட்டப்பட்ட நிதி விவரங்கள், வரவு - செலவு அறிக்கை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை முகநூல் வழியாகவே அனுப்பி வைத்திருக்கிறோம்.

அடுத்ததாக மதுரையில், காசநோய் பாதிப்பிற்குள்ளான ஏழை குடும்பங்களுக்கும், ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் ஏழைகளுக்கும், 2015 மழை - வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் சங்கொலிக்குப்பம் மக்களுக்கும் உதவ தீர்மானித்திருக்கிறோம்” என்றார் கிஷோர் குமார்.

ஏழை மக்களுக்கு இயன்றதைச் செய்யும் இந்த நிகழ்வைப் பாதுகாப்பாகவும், குளறுபடிகள் ஏற்படாமலும் ‘படிக்கட்டுகள்’ அமைப்பின் தன்னார்வலர்கள் செல்வா, வெற்றி, கயல்விழி , சந்துரு, மலைச்சாமி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x