Last Updated : 03 May, 2020 01:07 PM

 

Published : 03 May 2020 01:07 PM
Last Updated : 03 May 2020 01:07 PM

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிக்கரம்; சொந்த செலவில் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

புதுச்சேரி 

புதுச்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், நல்லவாடு, பூரணாங்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பூரணாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 101 மாணவர்களின் குடும்பங்களுக்கும், அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் உதவ முன்வந்துள்ளனர்.
ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களின் சொந்த செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

முதல் கட்டமாக பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் இன்று(மே 3) பள்ளியின் தலைமையாசிரியர் வேளாங்கன்னி வீரகுமார் தலைமையில் தலா 5 கிலோ அரிசி வழங்கினர். தொடர்ந்து மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் வேளாங்கன்னி வீரக்குமார் கூறும்போது,‘‘கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் தான்.

அவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவ முடிவு செய்து, ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து சொந்த செலவில் அசிரி வழங்கியுள்ளோம். பொருட்களை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு வாட்ஸ்அப் குழு மூலம் தகவல் தெரிவித்தோம்.

அதன்படி, தனிமனித இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினோம். தொடர்ந்து மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பணியையும் மேற்கொண்டுள்ளோம்’’இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x