Last Updated : 02 May, 2020 08:28 PM

4  

Published : 02 May 2020 08:28 PM
Last Updated : 02 May 2020 08:28 PM

சிவகங்கை ஆட்சியர் முயற்சியால் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாறும் வேலங்குடி : கண்காணிக்க புதிய செயலி

காரைக்குடி அருகே கே.வேலங்குடியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் புதிதாக கண்டறியப்பட்ட செயலியை சகோதரர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன் வழங்கினர்.

காரைக்குடி 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முயற்சியால் காரைக்குடி அருகே கே.வேலங்குடி கிராமம் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாறுகிறது. மேலும், இப்பணியைக் கண்காணிக்க புதிய செயலியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் சொந்தமாக வாங்கப்பட்ட 22 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர்நிலைகள் தூர்வாருதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியுள்ளது.

இந்நிலையில் காரைக்குடி அருகே கே.வேலங்குடி கிராமத்தில் 125 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் வறட்சியால் தரிசாக விடப்பட்டன. இதனால் அந்த நிலங்கள் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்நிலையில் கே.வேலங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முயற்சி எடுத்துள்ளார். மேலும் ஆட்சியருக்கு உறுதுணையாக ஜேசிபி இயந்திரங்கள் இயங்குவதைக் கண்காணிக்க கே.வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை (30), கார்த்திகேயன் (25) ஆகியோர் புதிய செயலி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் செயலி மூலம் அலுவலகத்தில் இருந்தபடியே 22 ஜேசிபி இயந்திரங்களும் இயங்கும் நேரம், டீசல் அளவு போன்றவற்றைக் கண்காணிக்க முடியும்.

இந்தச் செயலியை அந்தச் சகோதரர்கள் இலவசமாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளனர். மேலும், அந்தச் சகோதரர்கள் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150 பேருக்கு ரூ.652 மதிப்புள்ள அரிசி, பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.

மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்த 45 இளைஞர்கள், பெண்கள் இணைந்து ஒரு மாதமாக 300 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். அவர்களையும் ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x