Published : 02 May 2020 06:13 PM
Last Updated : 02 May 2020 06:13 PM
புதுச்சேரியில் தனது கைக்குழந்தையுடன் சாலையில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணை, பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், உணவளித்துத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னல் அருகில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன், இரு கட்டைப்பைகளை தோளில் சுமந்து தடுமாறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கரோனா சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடக்குப் பகுதி போக்குவரத்துக் காவலர் செண்பகவல்லி, மாற்றுத்திறனாளிப் பெண்ணை கைத்தாங்கலாக, தாங்கிக் கொண்டும், அவரின் ஒரு கைப்பையை சுமந்து கொண்டும் அந்தப் பெண்ணை சிக்னலை கடக்கச் செய்தார்.
பின்னர் அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்தப் பெண் தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், நேரு வீதி மார்க்கெட் பகுதியில் தங்கி கீரை வியாபாரம் செய்து வருவதாகவும், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு இன்று (மே2) திரும்பியபோது வாகன வசதி எதுவும் இல்லாமல், குழந்தையுடன் நடந்தே செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, காவலர் செண்பகவல்லி, அந்தப் பெண்ணையும், அவரது குழந்தையையும் சாலையோரம் அமர வைத்து, தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உணவை அவர்களுக்குக் கொடுத்துச் சாப்பிட வைத்தார்.
பின்னர், ஊரடங்கால் வாகன வசதி இல்லாத காரணத்தினால், சக காவலர் மார்ட்டின் உதவியுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் ஏற்றிக்கொண்டு, அவர் சேர வேண்டிய இடத்துக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்தார். காவலர் செண்பகவல்லியின் இந்தச் செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்துப் பெண் காவலர் செண்பகவல்லி கூறும்போது, "குழந்தையுடன் அந்தப் பெண் தடுமாறியபடி நடந்து வந்ததைப் பார்க்கும்போது, மனதுக்குக் கனமாக இருந்தது. வாகன வசதி எதுவும் இல்லாததால், அவரை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT