Published : 02 May 2020 03:53 PM
Last Updated : 02 May 2020 03:53 PM
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் மதுபானங்களுடன் வந்த 11 லாரிகள் புதுச்சேரிக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கோவா மாநிலத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் மதுபானங்கள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டன. மறுநாளே தமிழக எல்லையான ஓசூரை அடைந்ததும் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் அந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தினர்.
அனுமதிக் கடிதம் பெற்ற குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுபானங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதனைக் காரணம் காட்டி மதுபான லாரிகளை புதுச்சேரிக்குக் கொண்டு வரும் அனுமதியைப் பெற்றனர். அதன்படி கிருஷ்ணகிரியில் இருந்து கடந்த ஏப்ரல் 3-வது வாரத்தில் அந்த லாரிகள் புதுச்சேரிக்குப் புறப்பட்டன.
புதுச்சேரி மாநிலத்திற்குச் செல்ல இருந்த நிலையில் மதுபானங்களைக் கொண்டு வருவதற்கு புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் அந்த லாரிகள் தற்போது விழுப்புரம் மாவட்ட எல்லையான பட்டானூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் திருட்டு நடந்து வரும் சூழலில் தாங்கள் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் பாதுகாப்பின்றி சாலையில் நிற்கிறோம் என ஓட்டுநர்கள் கூறி வந்தனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் போலீஸார் விழுப்புரம் எஸ்.பி.க்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் புதுச்சேரிக்கு உரிமம் இருப்பதால் அங்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தினார். ஊரடங்கால் புதுச்சேரி போலீஸார் அனுமதிக்க மறுத்தனர்.
தொடர்ந்து லாரி ஓட்டுநர்கள் பலரும் தவிப்பில் இருந்தனர். கோடையில் வெட்டவெளியில் பீர் இருப்பதால் வெடித்து விட வாய்ப்புள்ளது. அதேசூழலில், இரவு நேரத்தில் பலரும் ஆயுதங்களுடன் பீர் கேட்டு மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
இரு மாநில போலீஸாரிடமும் பாதுகாப்பு கோரியபடி இருந்தனர். இச்சூழலில் எல்லையில் இருந்த பீர் லாரிகளுக்கு புதுச்சேரி கலால்துறை அனுமதி தநத்து. அதையடுத்து, இன்று (மே 2) இரு வார காத்திருப்புக்குப் பிறகு ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் லாரிகள் புதுச்சேரிக்குள் நுழைந்தன.
இது தொடர்பாக ஆட்சியர் அருணிடம் கேட்டதற்கு, "ஊரடங்குக்கு முன்பே மதுபானம் எடுத்து வர ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இரு நிறுவனங்கள் அதைச் செய்திருந்தன. அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தற்போது புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. கலால் துறை முன்னிலையில் அவை குடோன்களில் வைத்து சீல் வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT