Published : 02 May 2020 12:46 PM
Last Updated : 02 May 2020 12:46 PM
தற்போது கோயம்பேடு சந்தை தமிழகத்தில் நோய்த்தொற்று மையமாக மாறியுள்ளதோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் குவிந்தது கடந்த வாரம் வரை நடந்தது. எனவே உடனடியாக அனைவருக்குமான சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை கோயம்பேடு சந்தை புதிய கரோனா நோய்த் தொற்று மையமாக உருவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்களுக்கும், அங்கு காய்கறி வாங்கவும், விற்கவும் சென்று வந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அங்கு கடந்த சில நாட்களாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள், அங்கு அடிக்கடி சென்று வந்த பிற வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கடந்த சில நாட்களாக கரோனா ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 40 பேருக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்பேடு சந்தை வழியாக ஏற்பட்ட தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
கோயம்பேடு சந்தை மூலமான நோய்த்தொற்று சென்னையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகம் முழுவதும் நீள்கிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றி அரியலூர் மாவட்டத்திலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்ற 19 பேருக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு தொழிலாளிக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்கு திரும்பிய இரு தொழிலாளர்களுக்கு நேற்று முன்நாள் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தவிர கோயம்பேடு சந்தையில் பணியாற்றித் திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கடலூர் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு கரோனா உறுதியாகும் எனத் தெரியவில்லை.
இவர்கள் தவிர சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கடந்த 39 நாட்கள் ஊரடங்கு காலத்தில் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும் அதை மதிக்காத மக்கள் தொடர்ந்து அங்கு சென்று வந்ததாகத் தெரிகிறது.
குறிப்பாக கடந்த 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கோயம்பேடு சந்தையில் கடந்த பல நாட்களுக்கு முன்பே கரோனா தொற்று நிகழத் தொடங்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்தகைய சூழலில் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடித்து சோதனை செய்து குணப்படுத்தாவிட்டால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவி, நிலைமை மோசமடையக்கூடும்.
இதைத் தடுக்கும் வகையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள், மற்றும் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு ஏதேனும் சில வகைப்பாடுகளின் அடிப்படையில் சோதனை செய்து அச்சத்தைப் போக்க வேண்டும். அங்கு சென்று வந்தவர்களில் யாருக்கெல்லாம் சோதனை தேவை என்பதை அறிவித்து, அவர்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்துகொள்ள அரசு அறிவுறுத்த வேண்டும்.
மற்றொருபுறம் கோயம்பேடு சந்தையில் தற்போது கடைகளை நடத்தி வரும் வணிகர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிடம் தங்களுக்கும் கரோனா வைரஸ் பரவுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT