Published : 02 May 2020 12:40 PM
Last Updated : 02 May 2020 12:40 PM
கரோனா வைரஸ் பரவலால் ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால், எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மாணவர்கள் அதிக அளவில் கூடும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு, செமஸ்டர் தேர்வுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் தயாரான வேளையில் கரோனா வைரஸ் தொற்றால் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்துத் தேர்வுகளை நடத்த முடியாத நிலைக்குக் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆய்வாளர்கள்
உயர்கல்வி நிறுவனங்களில் எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், இக்காலகட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அப்பணியை முடிக்க முடியாத சூழலில் உள்ளனர்.
கோவை பாரதியாார் பல்கலைக்கழக நெறிமுறைகளின்படி, எம்.ஃபில்., முழுநேர ஆராய்ச்சிக் காலம் குறைந்தபட்சம் ஓராண்டு. பகுதிநேர ஆராய்ச்சிக் காலம் 2 ஆண்டுகள். பல்கலைக்கழகத்தில் கூடுதல் அவகாசமாக (Extention) மேலும் ஓராண்டு பெறலாம். இதற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை விண்ணப்பித்து ஆய்வுக் கால நீட்டிப்பு அனுமதி பெற வேண்டும்.
எம்.ஃபில் முடித்து முழுநேர பி.ஹெச்.டி. படிப்பில் சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக்காலம் 2 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக்காலம் 3 ஆண்டுகள். பல்கலைக்கழக அனுமதி பெற்று கூடுதலாக 2 ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
பகுதிநேர பி.ஹெச்.டி. படிப்பில் சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 3 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக்காலம் 5 ஆண்டுகள். பல்கலைக்கழகத்தில் கால நீட்டிப்பு அனுமதி பெற்று மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம்.
முதுநிலை பட்ட மேற்படிப்பை முடித்து, எம்.ஃபில் படிக்காமல் நேரடி பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு முழுநேர ஆய்வாளர்களாக சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 3 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக் காலம் 5 ஆண்டுகள். கால நீட்டிப்பு அனுமதி பெற்று மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம்.
நேரடி பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த பகுதி நேர ஆய்வாளர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 4 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக் காலம் 6 ஆண்டுகள். கால நீட்டிப்பு அனுமதியுடன் மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம்”.
ஆய்வுக் காலம் முடிந்து ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள ஆய்வாளர்கள், கால நீட்டிப்பு கோரும் ஆய்வாளர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையால் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை மீண்டும் எப்போது திறப்பது? மாணவர்களுக்கு எப்போது செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது? எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான இடையூறுகளைக் களைவது குறித்து ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அமைத்தது.
நிபுணர் குழு பரிந்துரைகள்
"கரோனா ஊடரங்கு காலத்தில் எம்.ஃபில், பிஹெச்.டி. ஆய்வேடு சமர்ப்பித்தல் மற்றும் ஆய்வுக் காலம் நீட்டிப்புக்குக் காத்திருக்கும் ஆய்வாளர்களுக்கு, காலாவதியாகும் தேதியில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு அளிக்கப்படும்.
ஆய்வேடுகள் சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கு இக்காலகட்டத்தில் வாய்மொழித் தேர்வு நடத்த வேண்டியிருப்பின், அதை கூகுள், ஸ்கைப் மற்றும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காணொலிக் காட்சி மூலமாக நடத்திக் கொள்ளலாம்.
இதில் ஆராய்ச்சி ஆலோசனைக்குழு, துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆய்வறிஞர்கள், நெறியாளர், புறநிலைத் தேர்வாளர் ஆகியோர் கலந்து கொள்ளலாம். பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி சமர்ப்பிக்க வேண்டும்" என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
யூஜிசி நிபுணர் குழுவின் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், ஆய்வாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில கோரிக்கைகள் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும், பல்கலைக்கழங்களுக்கும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கட்டணங்கள் ரத்து?
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக கோவை மண்டலச் செயலாளரும், கோவை அரசு கலைக் கல்லூரி எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான யூஜிசி நிதியுதவிப் பிரிவு பொறுப்பாளருமான முனைவர் ப.ரமேஷ் கூறியதாவது:
"யூஜிசி நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கான 6 மாத கால நீட்டிப்பை, கடைசித் தேதி முடிவடையும் நாளில் இருந்து தொடர்வதற்காக பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை வெளியிட வெண்டும்.
தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், இதற்காக ஆய்வாளர்களை விண்ணப்பிக்க வற்புறுத்தக்கூடாது. பல்கலைக்கழகங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதால், இதுபோன்ற ஊடரங்கு காலகட்டத்தில் அவர்கள் வந்து செல்வதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். இதேபோல் காலநீட்டிப்புக்கும், ஆய்வேடு சமர்ப்பித்தலுக்கும் ஆய்வாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தைப் பல்கலைக்கழகங்கள் ரத்து செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்.ஃபில், பிஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்ளும் முழுநேர ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் திட்டங்களின் கீழ், நிதியுதவி பெற்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நிதியுதவி காலம் முடிந்தும், ஆய்வேடு சமர்ப்பிக்க கால அவகாசம் பெறும் ஆய்வாளர்களுக்கு, அவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்பட்ட ஆய்வுக் காலத்துக்கும் நிதியுதவியைத் தொடர்ந்து வழங்க வேண்டும். ஆய்வாளர்கள் இக்கால நீட்டிப்பைப் பயன்படுத்தி நெறியாளர்களின் வழிகாட்டுதல்படி உரிய காலகட்டத்தில் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வேடுகளாகச் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT