Published : 02 May 2020 10:53 AM
Last Updated : 02 May 2020 10:53 AM
ஊரடங்கு முடியும் போது தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு கரோனா பரவலை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் கரோனா என்ற கொடிய நோயிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மிக முக்கியமாக மதுபானக் கடைகளை மூடியதும் பயன் தந்திருக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல மதுக்குடிப்பவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்பளித்திருக்கிறது.
அதாவது, மதுக்கடைகள் திறந்திருப்பதால் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமல்ல மாணவர்கள், இளைஞர்கள் என புதிது புதிதாக மது குடிக்க விரும்புபவர்களும் மதுக்கடைகளுக்கு வருகிறார்கள். அது மட்டுமல்ல குடும்பத்தில் சண்டை, பொருளாதார இழப்பு, பொது இடங்களில் பிரச்சினை, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை எல்லாம் மது குடிப்பதாலும் நடைபெறுகிறது.
மொத்தத்தில் குடிப்பவர்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவச்செலவும் கூடி, உயிருக்கும் கேடாகி, குடும்பமும் பாதிக்கப்படும். குடிப்பவர்களின் உடல் நலன் பாதிக்கப்படும்போது அரசின் மருத்துவச் செலவும் தேவையில்லாமல் விரயமாகிறது.
எனவே, மது குடிப்பவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குடும்பப் பிரச்சினை, வருங்கால சந்ததியினருக்கு பிரச்சினை, உயிரிழப்பு ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்களை கவனத்தில் கொண்டால் மதுக்கடைகளை முழுமையாக நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் உண்மை நிலை.
அதுவும் இப்போதைய கரோனா பரவலை தடுப்பதற்காக மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிப்பதால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சுமார் 99 சதவீத அளவுக்குக் குறைந்துவிட்டது எனலாம். அதே சமயம் அரசுக்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதும் உண்மை தான். மதுக்கடைகளை திறப்பதால் கிடைக்கும் வருமானத்தை விட மதுவினால் ஏற்படும் தீமைகள், பிரச்சினைகள், துன்பங்கள் ஆகிவற்றைத் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக அரசு – மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை சரிசெய்ய வேறு ஏதேனும் செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூடியதால் மதுப்பழக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மதுக்குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். மது குடிக்க வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது.
இவர்களுக்கும் உளவியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்கினால் திருந்திவிடுவார்கள். எனவே, தமிழக அரசு ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி ஊரடங்கு முடியும் போது தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள், தமிழக அரசுக்கு நன்றியோடு இருப்பார்கள்.
மேலும், தமிழக அரசு மதுக்கடைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இப்போதிருந்தே நடவடிக்கைகளை எடுத்து தமிழக மக்கள் நலன் காக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT