Published : 20 Aug 2015 01:47 PM
Last Updated : 20 Aug 2015 01:47 PM
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல வருடங்களாக குடிநீர் வசதியும், முறையான சாக்கடை வசதியும் செய்து கொடுக்கப்படாததால், அப்பகுதியினர் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரத்துக்கும் போத்தனூருக்கும் இடையே உள்ள நாடார் காலனி, கோல்டன் நகர், லட்சுமிநாராயணா நகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. வெள்ளலூர் பேரூராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதும், குடிநீர் குழாய் அமைப்பதும் பல வருடங்களாக நிலுவையிலேயே வைக்கப்பட்டுள்ளன.
தீவு போல…
வீடுகளைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக் கேடுகளுக்கு நடுவே வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இங்குள்ள மக்கள். கழிவுநீர் வெளியேற வழியின்றி, கொஞ்சம் கொஞ்சமாக போத்தனூர் - ராமநாதபுரம் பிரதான சாலையில் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளலூர் பேரூராட்சிக்கும், கோவை மாநகராட்சிக்கும் இடைப்பட்ட இடத்தில் தீவு போல இந்த பகுதி சிக்கிக் கொண்டதால், எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமும் விபத்து
சாலை ஓரங்களில் சாக்கடை நீர் வழிந்தோடுவதால், அந்த பகுதியில் சாலை முழுவதும் மேடுபள்ளமாக மாறியுள்ளது. இதனால் அங்கு தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு திட்டத்தையும் வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் இங்கு செயல்படுத்தவில்லை என புகார் கூறுகின்றனர் பொதுமக்கள்.
வெள்ளலூரைச் சேர்ந்த டேனியல் கூறும்போது, ‘வெள்ளலூர் பேரூராட்சியின் மற்ற பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாடார் காலனி, கோல்டன் நகர் பகுதியில் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வசதி, நீண்ட காலமாக செய்து தரப்படவில்லை. இதேபோல சாக்கடை வசதிகள் மிக மோசமாக உள்ளன. வீடுகளுக்கு நடுவே குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.’ என்றார்.
இதேபகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ‘நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்காலில் ஏற்பட்ட சுகாதாரக்கேடு காரணமாக எலிக்காய்ச்சல் பரவிய சம்பவங்கள் கூட இங்கு ஏற்பட்டுள்ளன. சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே எங்களது நீண்ட நாள் கோரிக்கை’ என்றனர்.
‘முடிவுக்கு வரும்’
1-வது வார்டு கவுன்சிலர் தமிழரசி கூறும்போது, ‘நஞ்சுண்டாபுரம் சாலை திறக்கும் வரை சாக்கடைக் கால்வாய் அமைக்க முடியவில்லை. தற்போது அந்த பணிகளை தொடங்க திட்டம் தயாரித்து, நிர்வாக அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். 20 வருடமாக இங்கு குடிநீர் இல்லை. தற்போது ரூ.21 லட்சத்தில் குடிநீர்த் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. விரைவிலேயே அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT