Published : 02 May 2020 08:08 AM
Last Updated : 02 May 2020 08:08 AM
கரோனா தொற்று இல்லாத நிலை தொடருமானால், மே 13-ம் தேதிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாறும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
கோபி நகராட்சி பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் தொகை மற்றும் சிறுவணிக கடன்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் சி.கதிரவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். கடந்த 17 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை. மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்ட 18 பகுதிகளில், 9 பகுதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 பகுதிகள் படிப்படியாக தளர்வு செய்யப்படும். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, கடைசியாக நோய் தொற்று ஏற்பட்ட நாள் முதல் 28 நாட்களுக்கு பின்பே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாற வரும் 13-ம் தேதிக்கு பிறகு வாய்ப்பு உள்ளது. அப்போது யாருக்கும் தொற்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும்.
வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் மாவட்ட எல்லையில் நிறுத்தப்படுகிறது. அந்த லாரிகளை நமது மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் ஓட்டிச்சென்று, பொருட்களை இறக்க வேண்டிய இடத்துக்கு செல்வார்கள்.வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 374 பேரும், பிற மாநிலங்களில் இருந்து வந்த 103 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின் றனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT