Published : 01 May 2020 05:15 PM
Last Updated : 01 May 2020 05:15 PM
மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’ தொற்று தீவிரமடைந்துள்ளதால் வாகனங்களில் அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதற்கு அனுமதி அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்படுகிறது.
மதுரையில் சமீப நாட்களாக ‘கரோனா’ தொற்று அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடில்லாமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ‘கரோனா’ பரவத்தொடங்கியுள்ளது.
இந்த நோய் பரவலைத் தடுக்க மதுரை மாநகராட்சிக்குட்ப்பபட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் வெளியே செல்லும் நபர்கள் மாநகராட்சியிடம் அனுமதி அடையாள அட்டை பெறும் நடைமுறை தொடங்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் விசாகன் கூறுகையில், ‘‘அனுமதி அடையாள அட்டைகள், மஞ்சள், ஆரஞ்சு, நீலம் வண்ணங்களில் வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற அட்டை பெறுகிறவர்கள் திங்கட்கிழமை, வியாழக்கிழமையும், ஆரஞ்சு நிற அட்டை பெறுகிறவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும், நீல நிற அட்டை பெறுகிறவர்கள் புதன் மற்றும் சணிக்கிழமையும் என வாரத்தில் இரண்டு நாட்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அனுமதி சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லத்தக்கது. மருத்துவ அவசரத்திற்கும் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பால் உள்ளிட்டப்பொருட்கள் வாங்கிக் கொள்வதற்கும் இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
18 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வர முடியும். நடக்கும்போதும், வாகனத்தில் செல்லும்போதும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் பொருட்களை வாங்கும்போதும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT