Published : 01 May 2020 03:35 PM
Last Updated : 01 May 2020 03:35 PM
மன உறுதியே என்னை மீட்டெடுத்தது என கரோனாவில் இருந்து மீண்ட 68 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே பசுவந்தனை சேர்ந்த பிச்சைமணி மனைவி வேலம்மாள் (68). ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பூரண குணமடைந்தைத் தொடர்ந்து இன்று அவர் வீடு திரும்பினார்.
இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியில், "டெல்லிக்கு நாங்கள் சுற்றுலா சென்றபோது, அங்கு அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. அங்கு நாங்கள் ராமர் கோயிலில் மட்டும் தரிசனம் செய்தோம். இங்கு நான் திரும்பி வந்தபோது. டெல்லி சென்று வந்ததால் தனிமையில் இருக்க வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அதனை நான் பின்பற்றினேன். என்னுடைய ரத்த மாதிரி பரிசோதனையில், கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வந்த அறிக்கையையடுத்து ஏப்.18-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன்.
முதலில் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இப்போது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். காலையில் இட்லி, தோசை. பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒரு உணவு கொடுப்பார்கள்.
ஒரு நாளைக்கு 3 வேளை மிளகு பால், பூண்டுபால் ஆகியவை கொடுப்பார்கள். மேலும் முட்டை, ஆரஞ்சுபழம் ஆகியவையும் கொடுப்பார்கள். காலை 11 மணிக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும்.
மதிய உணவாக சாம்பார் சாதம், பூண்டு குழம்பு சாதம் கொடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி வழங்கினர்.
அந்த வார்டில் நான் மட்டும்தான் சிகிச்சை பெற்று வந்தேன். செவிலியர்கள் என்னிடம் வந்து அடிக்கடி உடல் நிலை குறித்து விசாரிப்பார்கள். ஆதரவாகப் பேசுவார்கள். மாவட்ட ஆட்சியரும் என்னிடம் நலம் விசாரித்தார்.
ஒரு ஆசிரியரின் பணி மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் மன உறுதியை கற்றுக் கொடுப்பதுதான். அதனால் இதனை நான் மன உறுதியுடன் எதிர்கொண்டேன். மன உறுதிதான் என்னை மீட்டு எடுத்தது. இப்போது எனக்கு பூரண மகிழ்ச்சி" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT