Published : 01 May 2020 01:47 PM
Last Updated : 01 May 2020 01:47 PM
கரோனா அச்சத்தில் பணிபுரிந்து வரும் ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதனால் மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், ரேஷன் கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் ரேஷன் கடைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஊரடங்கால் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் ரூ.1,000 உதவித்தொகை, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.
சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், வெளியில் வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் குறிப்பிட்ட இடைவெளியில் காத்திருந்து பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பொருட்கள் வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி, கரோனா அச்சத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறும்போது, "மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை நாங்கள் எங்கள் சொந்த செலவிலேயே வாங்கிப் பயன்படுத்துகிறோம். பல இடங்களில் அடிக்கடி கைக்கழுவ வசதி இல்லாததால், கிருமிநாசினி வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்.
காவல்துறையினர் உதவிக்கு வந்தாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், தனிமனித விலகலைப் பின்பற்றுவதிலும் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்தோம். பொதுமக்கள் ஒவ்வொரையும் அணுகும் போது ஒருவித அச்ச உணர்வுடனே இருக்க வேண்டியுள்ளது. எனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT