Last Updated : 01 May, 2020 12:16 PM

 

Published : 01 May 2020 12:16 PM
Last Updated : 01 May 2020 12:16 PM

குமரியில் ஊரடங்கால் குழந்தைகளுடன் உணவின்றி தவிக்கும் கார்நாடக நாடோடி மக்கள்: மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் கர்ப்பிணிகள் அவதி

நாகர்கோவில்

கரோனா ஊரடங்கால் குமரியில் வசித்துவந்த கர்நாடகாவைச் சேர்ந்த நாடோடி மக்கள் குழந்தைகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர். கர்ப்பிணிகள் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் குழித்துறை, கழுவன்திட்டை, மற்றும் பிற பகுதிகளில் உள்ள ரயில் நிலையம் அருகே கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாடோடி குடும்பத்தினர் தார்பாலினால் கூடாரம் அமைத்து வசித்து வருகினறனர்.

இவர்கள் ஆறு, குளங்களில் மீன்பிடித்து அவற்றை விற்றும், தங்கள் தேவைக்கு பயன்படுத்தியும் வாழ்ந்து வந்தனர்.அதுதவிர அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளை நம்பி பிழைத்துவந்தனர்.

மேலும் திருமண நாட்களில் மண்டபங்களில் சென்று உணவருந்தியும், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்களில் நடக்கும் விழா நிகழ்ச்சியின்போது அன்னதானத்தை உண்டும் பசியாறினர்.

தற்போது ஊரடங்கால் வேலை செய்ய முடியாமலும், திருமணம், கோயில் விழாக்கள் இல்லாததால் அன்றாடம் உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

நாடோடிகளான இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லாததால் இலவச ரேஷன் பொருட்களும் கிடைப்பதில்லை. உணவு பொருட்களை நிவாரணமாக வழங்கும் தொண்டு நிறுவனத்தினர், பொதுநல ஆர்வலர்கள் எப்போதாவது கொடுக்கின்றனர்.

பிற நேரங்களில் யாரும் வராததால் பக்கத்தில் யாராவது கொடுக்கும் அரிசியை வைத்து ஒருநேரம் கஞ்சி வைத்து பசியாறி வருகின்றனர். இத்துடன் இவர்களுடன் 5க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்குரிய மாத்திரை, மருந்து எதுவும் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து நாடோடிகள் கூறுகையில்; ஊரடங்கு நேரத்தில் ஒரு நேரம் உணவு கிடைப்பதே சிரமமாக உள்ளது. வழக்கமாக நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலும் இல்லாததால், குழந்தைகளும் பட்டினியில் தவிக்கின்றனர். ஊரடங்கு முடியும்வரை அரசு, மற்றும் தன்னார்வலர்கள் எங்களுக்கு தினமும் உணவுப் பொருட்களை வழங்கினாலே போதும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x