Published : 01 May 2020 08:19 AM
Last Updated : 01 May 2020 08:19 AM
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். நேற்றைய (ஏப். 30) நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றால் கோவையில் 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் கடந்த மார்ச் 2-வது வாரம்முதல்முறையாக கரோனா வைரஸ் தொற்றுஉள்ள பெண் கண்டறியப்பட்டார். தொடர்ந்து,சுகாதாரத் துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்றால்பாதிப்புக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அண்மையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது.
11 முக்கிய இடங்கள்
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துதல், நோய் தடுப்பு மருந்துகளை தெளித்தல்,தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர், அவர்களைச் சுற்றி குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி சீல் வைத்து கண்காணித்தல் போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். நோய் தொற்று பரவலைத்தடுக்க `சீல்' வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகரில் கே.கே.புதூர், போத்தனூர்ரயில்வே மருத்துவமனை, போத்தனூர், உக்கடம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், சேரன் மாநகர்,வெள்ளக்கிணறு ஆகிய 11 பகுதிகள் ‘கண்டெய்ன்மென்ட் பிளேசஸ்’ எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
24 பகுதிகளுக்கு `சீல்'
மாநகரில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் நான்கில் ஒரு பங்குமக்கள், அதாவது சுமார் 5 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். மற்ற பகுதிகளில் ஊரடங்கின்போது இருக்கும் கட்டுப்பாடு தளர்வுகள், சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் இருக்காது. இந்தப் பகுதியில் ஒரு பாதையைத் தவிர, மற்ற அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே இங்குள்ள மக்கள் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘நேற்றைய (ஏப். 30) நிலவரப்படி கோவை மாநகரில் மொத்தம் 67 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 61 பேர் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் போத்தனூரைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அங்கு 22 பேரும், உக்கடத்தில் 13 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, குனியமுத்தூரில் 8 பேர், ஆர்.எஸ்.புரத்தில்6 பேர், கவுண்டம்பாளையத்தில் 5 பேர், போத்தனூர் ரயில்வே மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்தில் 5 பேர், பூமார்க்கெட்டில் 3 பேர், சேரன் மாநகரில் 2 பேர், கே.கே.புதூர், சுந்தராபுரம், வெள்ளக்கிணறு பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கே.கே.புதூர், போத்தனூர், அதற்குஅருகேயுள்ள சாய் அம்மன் அபார்ட்மென்ட், பாரதி நகர், அம்மன் நகர், கருப்பராயன் கோயில்வீதி, ஜம்ஜம் நகர், போத்தனூர் பிரதான சாலை,திருமறை நகர், ஜி.எம்.நகர், ரோஸ்கார்டன்,கரும்புக்கடை, தெற்கு உக்கடம், பூ மார்க்கெட் அருகேயுள்ள சிரியன் சர்ச் சாலை, ஆர்.எஸ்.புரம்அருகேயுள்ள மேற்கு பெரியசாமி சாலை,ராமச்சந்திரா சாலை, சுந்தராபுரம் அருகேயுள்ள கஸ்தூரி கார்டன், குனியமுத்தூர் அருகேயுள்ள வசந்தம் நகர், கோவை கார்டன், கவுண்டம்பாளையம் அருகேயுள்ள சிவா நகர், அம்பேத்கர் காலனி, சேரன் மாநகர் அருகேயுள்ள சாவித்திரி நகர், வெள்ளக்கிணறு அருகேயுள்ள ரமணி மயூரி, குனியமுத்தூர் பி.கே.புதூர் ஆகிய 24 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. குனியமுத்தூர், போத்தனூர் காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன’’ என்றனர்.
தொலைபேசி மூலம் ஆர்டர்
சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வசிக்கும் மக்களிடம், சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள மளிகைக் கடைகளின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம். அந்தப் பொருட்களை மளிகைக் கடை ஊழியர்கள் கொண்டுவந்து, காவல் துறையினர் முன்னிலையில் அங்குள்ள மாநகராட்சி ஊழியரிடம் ஒப்படைப்பர். அவர், பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்து, அந்த மளிகைப் பொருட்களை எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட வீட்டில் ஒப்படைத்து, பணத்தைப் பெற்று, அதை மளிகைக் கடை ஊழியரிடம் கொடுப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT