Published : 30 Apr 2020 09:07 PM
Last Updated : 30 Apr 2020 09:07 PM
வீட்டு உபயோக மின்சாரத்திற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், “கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும்..
சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாயக் கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
உற்பத்தி நடக்காமல் ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி நெருக்கடி அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடரும். அதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT