Published : 30 Apr 2020 08:24 PM
Last Updated : 30 Apr 2020 08:24 PM
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, அரசு அளித்த வட்டித் தள்ளுபடி சலுகை செப். 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“வட்டிச் சுமையின் காரணமாக, விற்பனைப் பத்திரம் பெறாமல் இருந்த, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவற்றினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை, வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டுத் தள்ளுபடி செய்து, அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 15 அன்று ஆணை வழங்கியது.
அரசின் இச்சலுகையினை முதற்கட்டமாக, ஒருவருட காலத்திற்கு அதாவது 2018 ஆகஸ்டு 26 வரையிலும், பின்னர், இரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு, எதிர்வரும் மார்ச் 31 அன்றுடன் இச்சலுகை முடிவடைய இருந்தது.
இந்நிலையில், அரசின் இச்சலுகையினை, கால நீட்டிப்பு செய்யுமாறு, தமிழக வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்தனர். 2020-ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கடந்த மார்ச் 24 அன்று நடைபெற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, நடப்பில் உள்ள, வட்டித் தள்ளுபடி திட்டத்தினை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், இச்சலுகையினை எதிர்வரும் செப். 30 அன்று வரை கால நீட்டிப்பு செய்ய, துணை முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துணை முதல்வர் ஆணையின்படி, வட்டித் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட கோட்டம்/பிரிவு அலுவலகங்களை அணுகி, வட்டித் தள்ளுபடி நீங்கலாக, நிலுவைத் தொகையினை, ஒரே தவணையாக, எதிர்வரும் செப். 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற, இப்பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT