Published : 30 Apr 2020 06:07 PM
Last Updated : 30 Apr 2020 06:07 PM

கிலோ ரூ.3-க்கு வாங்க ஆளில்லை: 25 டன் முட்டைக்கோஸ்களை விற்க முடியாமல் தவிக்கும் ஈரோடு விவசாயி வேதனை

கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான நேரத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் நிலை இன்னும் மோசம். குறிப்பாக காய்கறி பயிரிட்டோரின் நிலை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத அளவுக்கு வேதனை நிறைந்ததாக இருக்கிறது.

அரும்பாடுபட்டு விளைவித்த காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவற்றைப் பயிரிட்ட இடத்திலேயே கொட்டி அழிக்கும் அவலத்தைத் தினந்தோறும் கடந்துவந்து கொண்டே இருக்கிறோம்.

அந்த வகையில் ஈரோடு, தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணையன் சுப்ரமணியம், சத்யமங்கலம் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் ஒட்ரஹள்ளி கிராமத்தில் குத்தகைக்கு எடுத்த 3.5 ஏக்கர் தோட்டத்தில் விளைந்துகிடக்கும் முட்டைக்கோஸ்களை விற்க வழி இல்லாமல், தவித்துக் கிடக்கிறார்.

முட்டைக்கோஸ் அறுவடை

நிராசையாகும் நம்பிக்கை

இதுகுறித்து அவர் பேசும்போது, ''விவசாயிகளில் பெரும்பாலானோர் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் என்றாவது ஒருநாள் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில்தான் விவசாயத்தைக் கைவிடாமல் தொடர்கின்றனர். அந்த நம்பிக்கை தொடர்ந்து நிராசை ஆகிக் கொண்டிருக்கிறது.

நிலத்தில் நான் 4 லட்ச ரூபாய் செலவில் முட்டைக்கோஸ் பயிரிட்டேன். 100 டன்கள் விளைந்தன. ஆனால் இவற்றை வாங்க ஆளில்லை. 25 டன்களுக்கும் மேல் வீணாகிவிட்டது.

இதில் நஷ்டம் இல்லாமல் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டுமென்றால்கூட, 1 கிலோவை 5 ரூபாய்க்கு விற்க வேண்டும். அறுவடைக் கூலி, கோணிப் பை, வண்டிகளில் ஏற்றுவதற்கான கூலி எல்லாம் சேர்ந்து தோட்டத்திலேயே அடக்க விலை 6 ரூபாய் ஆகிவிடுகிறது. இதுதவிர வரும் பணியாளர்களுக்கு காலை உணவு, டீ, காபி, அவர்கள் தோட்டத்துக்கு வந்துபோக ஆகும் செலவையும் நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் தற்போது முட்டைக்கோஸை கிலோ ரூ.3க்குத் தரத் தயாராக உள்ளேன். அதை வாங்க ஆளில்லை.

இதனால்தான் பல்வேறு இடங்களில் விவசாயிகள், தாங்கள் விளைவித்ததைத் தாங்களே அழிக்கிறார்கள். மற்றொரு புறம் மக்களுக்கு காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை. எப்போதும்போல இதில் இடைத்தரகர்களே அதிக லாபம் பார்க்கின்றனர்'' என்று வேதனைப்படுகிறார் விவசாயி கண்ணையன்.

நேரடிக் கொள்முதல்

இவை அனைத்துக்கும் தீர்வையும் அவரே சொல்கிறார். ''விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாகக் காய்கறிகளைக் கொள்முதல் செய்யவேண்டும், அவற்றை ஓடாமல் துருப்பிடித்து நிற்கும் அரசுப் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்று வீடு வீடாக விற்கலாம். விரைவில் கெட்டுவிடும் காய்கறிகளைக் குறைந்த விலைக்கோ, இலவசமாகவோ மக்களுக்குக் கொடுக்கலாம். அதற்கு சிறு வணிகர்களை அமர்த்திக் கொள்ளலாம். இதனால் வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்களுக்குக் காய்கறிகள் கிடைக்காத நிலையும் மாறும். எங்களின் வாழ்க்கையும் வளம்பெறும்.

அதேபோல அனைத்து விவசாய குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளையும் அரசே தற்காலிகமாகக் கையகப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்த வேளாண் பொருட்கள் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அவற்றில் அதைச் சேமிக்க வேண்டும்'' என்கிறார் கண்ணையன்.

தனது நிலை குறித்தும் பேசுபவர், ''ஏற்கெனவே முட்டைக்கோஸ் விற்காமல் இருப்பது குறித்து சில செய்திகள் வெளியாகின. ட்விட்டரில் நான் போட்டிருந்த பதிவைப் பார்த்து கர்நாடக எம்.பி. தேஜஸ்வி யாதவ் 12 டன்களை வாங்கினார்.

விவசாயி கண்ணையன்

ஒரு வாரம் மட்டுமே தாங்கும்

தற்போது நலம் விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவுமே அழைப்புகள் வருகின்றன; முட்டைக்கோஸை விற்க முடியவில்லை. இன்னும் 25 டன்கள் முட்டைக்கோஸ் பறிக்கப்படாமல் நிலத்திலேயே உள்ளது. அதிகபட்சம் ஒருவாரம் வரை இதுதாங்கும். அவ்வப்போது பெய்யும் மழையாலும் இவை நாசமாகின்றன. வியர்வை சிந்தி பாடுபட்ட உழைப்பு எந்நாளும் வீணாகாது, முட்டைக்கோஸ்கள் முழுமையாக விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் காலத்தைக் கழிக்கிறேன்'' என்று வேதனைப்படுகிறார் விவசாயி கண்ணையன்.

தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை இவரைப் போன்ற விவசாயிகளிடம் விளைபொருட்களை இருந்து வாங்கி மக்களுக்கு வழங்கலாம். விவசாயப் பின்னணியில் இருந்து வந்த முதல்வர் இவரைப் போன்ற விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பாரா?

விவசாயி கண்ணையனைத் தொடர்பு கொள்ள: 94449 89543.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x