Last Updated : 30 Apr, 2020 05:24 PM

 

Published : 30 Apr 2020 05:24 PM
Last Updated : 30 Apr 2020 05:24 PM

காவல், தீயணைப்பு, சுகாதாரத்துறை பணியாளர் 3 பேருக்கு கரோனா: ராமநாதபுரம் நகராட்சியின் பெரும்பகுதிகளுக்கு சீல்

காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ராமநாதபுரம் பஜார் காவல்நிலைய காவலர் குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள். படம்:எல்.பாலச்சந்தர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ்காரர், தீயணைப்புவீரர், சுகாதாரத் துறை பெண் பணியாளர் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 26-வரை அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதி 5 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தில் பணியாற்றும் 30 வயதுடைய போக்குவரத்துக் காவலர், பனைக்குளம் சோகையன் தோப்பைச் சேர்ந்த ஆட்சியர் அலுவலக தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 29 வயதுள்ள தீயணைப்புவீரர் மற்றும் உச்சிப்புளி சூரங்காட்டு வலசையைச் சேர்ந்த 33 வயதுடைய தற்காலிக சுகாதார பெண் பணியாளர் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து போக்குவரத்து காவலர் வசிக்கும் ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய காவலர் குடியிருப்புப் பகுதி சீலிடப்பட்டது. அத்துடன் பஜார் காவல் நிலையமும் மூடப்பட்டது.

காவல் பணிகள் வராண்டாவில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் அமைந்துள்ள வண்டிக்காரத்தெரு, லேத்தம்ஸ் பங்களா சாலை, இளங்கோவடிகள் தெரு உள்ளிட்ட தெருக்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீலிடப்பட்டன.

அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவும், மற்றவர்கள் உள்ளே வரவும் தடைவிதிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் தீயணைப்பு நிலையமும் மூடப்பட்டது.

ராமநாதபுரம் சேதுநகரில் வசிக்கும் செவிலியருக்கு ஏற்கனவே கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சியின் 5 வார்டுகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பஜார் காவல்நிலைய காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சியின் பெரும்பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்ல செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x