Last Updated : 30 Apr, 2020 05:19 PM

 

Published : 30 Apr 2020 05:19 PM
Last Updated : 30 Apr 2020 05:19 PM

கரோனா தன்னார்வலர்களுக்கு சொந்த செலவில் நிவாரணப் பொருட்கள்: காவல் ஆய்வாளரின் கரிசனம்

கரோனா எதிர்ப்புப் போரில் களத்தில் அதிகம் பாராட்டைப் பெறுபவர்களும் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகிறவர்களும் காவல் துறையினர்தான். ஆனாலும் தங்கள் மீதான விமர்சனங்களை தூக்கித் தூர எறிந்துவிட்டு மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தன்னை இன்னும் ஒருபடி மேலானவராக அடையாளம் காட்டியிருக்கிறார் திருச்சி காவல் ஆய்வாளர் ஒருவர்.

அனைவரும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் சகாய அன்பரசு, கரோனா களத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

ஆம், தனது ஊதியத்துடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்களிப்பையும் சேர்த்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்களைத் தன்னார்வலர்களுக்கு வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சகாய அன்பரசு. இவர் சுமார் இருபது ஆண்டுகளாக காவல்துறை பணியில் இருக்கிறார். தான் பணியாற்றும் காவல் நிலையங்கள் சார்ந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது இவரது வழக்கம். கரோனா பணியில் கடமையாற்றி வரும் இவர், காவல் பணியில் தங்களுக்கு இணையாகக் களத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் குறித்துச் சிந்தித்தார்.

பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நாள் முதல் என்எஸ்எஸ் மற்றும் என்சிசிகளில் உள்ளவர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் சுமார் 40 பேர் இவருடன் கைகோத்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தக் கரோனா காலத்தில இவர்களும் மற்றவர்களைப் போல துன்பத்தில் தானே இருப்பார்கள் என்று யோசித்த சகாய அன்பரசு, அந்தத் தன்னார்வலர்களின் குடும்பங்களுக்குத் தன்னால் இயன்ற உதவி செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து, அந்த 40 பேருக்கும் தலா 25 கிலோ அரிசியுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைக் பொருட்களை மொத்தமாக வாங்கி அதை அவர்களிடம் வழங்கினார்.

"ஊதியம் இல்லாமல் களத்தில் உயிர் பயத்தையும் கடந்து பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு என்னால் செய்ய இயன்றது இதுதான். தன் குடும்பத்தை மறந்து பணியாற்றும் அவர்களுக்கு ஒரு சின்ன மரியாதை இது" என்று இந்த உதவிக்கு விளக்கம் சொல்கிறார் சகாய அன்பரசு.

திருச்சி காவல் சரகத்தில் முதல் முறையாக இப்படி ஒரு சேவையைத் தொடங்கி வைத்த சகாய அன்பரசுக்கு சக காவலர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுமழை பொழிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x