Published : 30 Apr 2020 05:15 PM
Last Updated : 30 Apr 2020 05:15 PM
புதுச்சேரியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது பென்ஷன் பணத்தில் மனைவியுடன் சேர்ந்து முகக்கவசம் தயாரித்து ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனோ வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கப் பலரும் பயன்படுத்த வேண்டிய முக்கியப் பொருளாக முகக்கவசம் மாறியுள்ள நிலையில், அதன் தேவையைக் கருத்தில்கொண்டு முகக்கவசத்தின் விலையை உற்பத்தியாளர்கள் கடுமையாக உயர்த்தியுள்ளனர். மேலும் முகக்கவசங்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது பென்ஷன் பணத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களைத் தாமே தயாரித்து வழங்கி வருகிறார். புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
ஆரம்பம் முதலே பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ராஜகோபால், கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென எண்ணிய அவர், பொதுமக்கள் வெளியே செல்லும்போது பயன்படுத்தும் முகக்கவசங்களை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.
இதற்காக தனது பென்ஷன் பணம் முழுவதையும், முகக்கவசம் தயாரிக்கத் தேவைப்படும் துணி உள்ளிட்ட பொருட்களை வீட்டுக்கே வாங்கி வந்து, தனது மனைவி ராணியுடன் சேர்ந்து இரவு பகலாக முகக்கவசங்களைத் தைத்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 100 முகக்கவசங்களைத் தயார் செய்யும் ராஜகோபால் அவற்றை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார்.
இதுகுறித்து ராஜகோபால் நம்மிடம் கூறும்போது, "கரோனா தொற்றால் உலகில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை வாங்கக்கூட முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
ஆகவே, அவர்களுக்கு உதவுகின்ற வகையில் நான் இந்த முகக்கவசங்களைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறேன். இந்தச் சேவைக்கு என்னுடைய மனைவியும் துணையாக இருந்து வருகிறார். இது எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
பொதுவாக பென்ஷன் தொகையைப் பிற்காலத்துக்குத் தேவையென சேமித்து வைப்பவர்கள் மத்தியில், தன்னுடைய பென்ஷன் பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்து வரும் ராஜகோபாலின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT