Published : 30 Apr 2020 04:14 PM
Last Updated : 30 Apr 2020 04:14 PM
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், விஷத்தன்மையுடைய 12 பாம்புகள் பிடிபட்டதால், மருத்துவமனை ஊழியர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் நிம்மதியடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, கண் கிசிக்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. பழமையான இந்த மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் புதர்கள் மண்டி இருப்பதால், விஷத்தன்மையுடைய பாம்புகள் வருவதாக ஊழியர்கள், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் மத்தியில் புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, மருத்துவமனை துாய்மை பணியாளரான செல்வி (45), என்பவரை, பாம்பு கடித்துத் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுதெடர்பான புகார்கள் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவுக்கு சென்றது.
இதனிடையே, இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன் படப்படிப்புக்கு வந்த போது நேரில் பார்த்தை வைத்து அண்மையில் விழா ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தங்கும் விடுதி அருகேயுள்ள புல், புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி (ஏப்.29), புதன்கிழமை மாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது, பாம்புகளை பிடிப்பதற்காக அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பேரில் அறக்கட்டளையைச் சேர்ந்த சதீஷ்குமார், குலோத்துங்கன், வின்சென்ட், சரவணன் உள்பட 10 பேர் சென்றனர். அங்கு 5 கண்ணாடி விரியன் பாம்புகள், 2 சாரைப் பாம்புகள், 3 சிறு வகைப் பாம்புகள் என மொத்தம் 10 பாம்புகளைப் பிடித்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று (ஏப்.30) வியாழக்கிழமை காலை முதல் புதர்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 2 பாம்புகள் பிடிபட்டன. தொடர்ந்து, மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யும் பணியும், பாம்புகள் பிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சதீஷ்குமார் கூறியதாவது:
"கண்ணாடி விரியன் பாம்புகள் பெரும்பாலும் நாஞ்சிக்கோட்டை, விளார் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முந்திரிக்காடுகளிலும், ரெட்டிபாளையம், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும்தான் காணப்படும்.
தஞ்சாவூர் நகருக்குள் இப்போதுதான் முதல்முறையாகக் கண்ணாடி விரியன் பாம்புகளைப் பார்க்கிறோம். அருகிலுள்ள கல்லணைக் கால்வாய் வழியாக வந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்.
பிடிபட்ட பாம்புகளில் விஷத்தன்மை இல்லாத சாரை மற்றும் சிறுவகைப் பாம்புகளை வயல் பகுதிகளில் விட்டுவிட்டோம். கண்ணாடி விரியன் பாம்புகள் விஷத்தன்மை உடையது என்பதால் காப்புக் காடுகளில் விட வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT