Published : 30 Apr 2020 03:10 PM
Last Updated : 30 Apr 2020 03:10 PM
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட வலியுறுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் 4,000 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்கள் பாதுகாவலர், கேபிள் இணைப்பாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இதர பராமரிப்புப் பணிகளில் உதவியாளராகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 90% பேர் திறன் குறைந்தவர் (Un skilled) என்ற அளவீட்டின் அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ.450 ஊதியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 10 முதல் 15 வருடங்கள் வரை ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அவர்கள் பல்வேறு கட்டப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டும் இதுவரை ஊதியம் கிடைத்தபாடில்லை. தற்போது கரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதைத் தவிர்த்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குக் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கிய நிலையிலும், அவர்களுக்கு ஊதியப் பிடித்தமோ, பணியிலிருந்து நீக்கவோ கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், மத்தியப் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கடந்த 10 மாதங்களாக ஊதியமின்றிப் பணிபுரிவது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் ஆனந்தன் கூறுகையில், "பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்களுக்கு அனைத்துப் பணப் பலன்களும் வழங்கியது மட்டுமின்றி, ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், 78 ஆயிரம் ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அவர்களது பணியை தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பிரதான வேலை வாங்குபவர் என்ற அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் முறையிட்டபோது, நிதிச் சுமையைக் காரணம் காட்டி, தாமதப்படுத்துகின்றனர். தனியாருக்கு விற்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இழப்பீட்டை ஏற்படுத்துவதோடு, அந்தக் காரணத்தை முன்வைத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை வெளியேற்றவும் திட்டம் தீட்டுவதாகக் கருதுகிறோம். எனவே மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தீர்வு காண முன்வர வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் ஜெகதீசனிடம் கேட்டபோது, "ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை இருப்பது உண்மைதான். அவர்கள் கூறுவது போன்று 10 மாதங்கள் கிடையாது. நிதிப்பற்றாக்குறை காரணமாக சில இடர்ப்பாடுகள் உள்ளன. விரைவில் அது சரி செய்யப்படும். அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவை முறையாகச் செலுத்தப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT