Published : 30 Apr 2020 01:37 PM
Last Updated : 30 Apr 2020 01:37 PM
சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் நோய்த் தொற்றின் தீவிரம் குறித்த அச்சமும், பூரண ஒத்துழைப்பும் இல்லாததுமே நோய்த் தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்கிறார்கள்.
இந்த நிலையில், அதிகாரிகள் நெருக்கடி நிலை காலத்தைப் போல் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றை முற்றாக ஒழிக்க முடியும் என்கிறார் தெற்கெல்லை போராட்டத் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதள செய்திப் பிரிவிடம் அவர் கூறுகையில், ''கரோனாவை தேசத்தைவிட்டு விரட்ட மத்திய - மாநில அரசுகள் நன்றாகவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அத்துடன், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் குரலுக்கும் செவிசாய்த்தால் இன்னும்கூடச் செம்மையாகச் செயல்பட முடியும்.
கரோனா களத்தில் பெரும்பாலான அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணி செய்தாலும், சில நிகழ்வுகள் குறித்து தொலைக்காட்சியில் பார்க்கும்போது அயற்சி எட்டிப் பார்க்கிறது. விதிகளை மீறி சாலையில் வருவோரின் வாகனம் பறிமுதல், வயது வித்தியாசம், பாலினப் பாகுபாடு இல்லாமல் தோப்புக்கரணம் போடவும், ஆடிப் பாடவும் தண்டனைகள் கொடுப்பது சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய அதிகாரிகளுக்கு, அதீத அதிகாரத்தைக் கொடுத்துவிட்டதன் வெளிப்பாடாகவும் தோன்றுகிறது.
இந்த நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதும் என் நினைவுகளில் சுழல்கிறது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டு அதிகாரிகள் அதீத அதிகாரத்தைப் பெற்றிருந்த நேரத்தில், வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது. குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டம் மலர்ந்தது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கிய செயல் நடந்தாலும் அதிகாரிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு மிகுந்த நன்மையை உருவாக்கியது. இதோ இப்போது கரோனா ஆளும் கட்சியினரையும் சேர்த்து வீட்டுக்குள் முடக்கி இருக்கிறது. அரசியல் தலையீடே இல்லாத இந்தக் காலத்தில் நீண்டகாலம் இடைத் தொங்கலாய் நிற்கும் மக்கள் நலன் பயக்கும் விஷயங்களை, சப்தமின்றி அதிகாரிகள் செய்யவேண்டும்.
நெருக்கடி நிலை காலம் நேர்மையான பல அதிகாரிகளைக் காட்டிக்கொடுத்தது. இந்தப் பகுதியில் கொடிக்கால், இலுப்பைக்கோணம், எம்.ஜி.ஆர் காலனி, மேகரை, திட்டுவிளை, கலிங்கராஜபுரம் எனப் பல குடியிருப்புகளை அப்போது இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளராக இருந்த நான், அதிகாரிகளின் துணையோடு உருவாக்கிக் கொடுத்தேன். நெருக்கடி காலத்தில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அளவு கடந்த அதிகாரங்கள் இருந்தாலும் அது மக்கள் நலனுக்காகவே பிரயோகிக்கப்பட்டது. அதேபோலத்தான் இப்போதைய சூழலும்.
இந்த சூழலில் வெளியே வருவோரை குனிந்து நில், நட, ஓடு, ஆடு எனச் சொல்லாமல் அதிகாரிகள் அன்பை விதைக்க வேண்டும். இந்தக் களத்தில் இத்தனை பேர் உயிரைப் பணயம் வைத்து நிற்கிறோம் என அன்பால் உணர்த்த வேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் அதிகாரிகளின் அன்புதான் மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தது. ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்தது. அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்டாலும் மக்களுக்கு அது பொற்காலமாகவே இருந்தது. அந்த நம்பிக்கையைத்தான் அதிகாரிகள் இப்போது மக்கள் மனங்களில் விதைக்கவேண்டும்.
பொதுமுடக்கத்தின்போது மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்கிறது அரசு. குமரி கடற்கரையில் நாடோடிகள் இருநூற்றுக்கும் அதிகமானோர் குடும்பங்களோடு அங்கேயே டெண்ட் கட்டி விளையாட்டுக் கொட்டு செய்து கடற்கரையில் விற்றுவந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் என்னைச் சந்தித்த அவர்கள், 'அரசாங்கம் மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறது. எங்களுக்கு வீடு இருந்தால் இருக்கமாட்டோமா?' என்று கேட்டுவிட்டு கிளம்பிப் போனார்கள். இப்படியான மக்களின் துயர்களை அரசிடம் சொல்லியிருக்க வேண்டியது அதிகாரிகள்தானே?
நெருக்கடி நிலையின்போது மக்களின் குரலை அரசுக்குச் சொல்பவர்களாக இருந்த அதிகாரிகள், இப்போது அரசு சொல்வதை மட்டுமே மக்கள் மத்தியில் செயபடுத்துபவர்களாக உருவாகி இருக்கிறார்கள். இது கொஞ்சம் வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். அப்படி மாறினால் கரோனா காலத்தை மக்கள் எளிதில் கடந்து வருவார்கள்'' என்றார் அப்துல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT