Published : 29 Apr 2020 10:04 PM
Last Updated : 29 Apr 2020 10:04 PM
நாளை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருட்கள் சாதாரணமாக கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் முண்டியடித்து வரவேண்டாம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் வரலாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணொலி வாயிலாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று விடுத்த கோரிக்கை:
“பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். 4 நாட்கள் முழு ஊரடைப்பு அமைதியாகச் சென்றது. அதற்கு நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாளை முதல் 26-ம் தேதிக்கு முன்பிருந்தது போல் இந்த ஊரடங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை பொருட்கள் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நாளை மறு நாளிலிலிருந்து வழக்கம்போல் கடைகள் காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இருக்கும். அதனால் நாளைக்கே கூட்டமாக வந்து பெரிய நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டு பொருட்களை வாங்க முயல வேண்டாம்.
தினமும் கடைகள் திறந்திருக்கும் என்பதால் நாளை அவசியம் பொருட்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் மட்டும் வாங்கலாம். நாளைக்கு அவசியம் இருக்கிறவர்கள் எப்போது கூட்டம் இல்லையோ, அப்போது வந்து வாங்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சரியான பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கவும்.
முன்பே கூறியிருந்ததுபோல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கச் செல்ல வேண்டாம். ஆங்காங்கே அவரவர் பகுதியில் இருக்கிற கடைகளுக்கு நடந்தே சென்று காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அனைத்துப் பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் சென்று வாங்க அனுமதி இல்லை. சிஎம்டிஏ நிர்வாகமும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே காய்கறி, பழம், பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே யாரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்.
பொதுமக்கள் உயிரைக் காக்க, கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”. .
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT