Published : 29 Apr 2020 08:22 PM
Last Updated : 29 Apr 2020 08:22 PM
காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசின் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.
அதில், ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.
மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.
மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவற்றைக் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.
பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும். இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT