Published : 29 Apr 2020 06:08 PM
Last Updated : 29 Apr 2020 06:08 PM
ஊரடங்கால் ஊர் ஊராக சென்று தொழில் செய்ய முடியாத நிலை இருப்பதால் மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடோடி குடும்பங்கள் உதவியின்றி தவிக்கின்றன.
மதுரை சக்கிமங்கலம் ஊராட்சியில் எல்கேபி நகர் மற்றும் நரிக்குறவர் காலனியில் ஊர் ஊராக செல்லும் பூம்பூம் மாட்டுக்காரர்கள், சாட்டையடி குழுவினர், ஊசி, பாசி விற்பவர்கள், வேஷம் போடுபவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், சாம்பிராணி புகை போடுபவர்கள், மந்திரித்து தாயத்து கட்டுபவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நாடோடி குடும்பங்கள் உள்ளன.
இவர்கள் கரோனா ஊரடங்கால் ஊர் ஊராக சென்று தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மதுரை எல்கேபி நகர் பூம் பூம் மாட்டுக்காரர்கள் சமுதாய தலைவர் காளிப்பன் கூறுகையில், தினமும் மாடுகளை அலங்காரம் செய்து வீடு, வீடாக அழைத்துச் சென்று ராமா, கோவிந்தா என்று சொல்லி தலையாட்ட செய்வோம். இதை பார்த்து மக்கள் எங்களுக்கு அரிசி, பணம், தானியம் தருவார்கள். இதான் எங்கள் பொழப்பு.
எங்கள் காலனியில் 45 குடும்பங்கள், 75 பூம் பூம் மாடுகள் உள்ளன. கரோனா வந்ததில் இருந்து பொழப்புக்கு வெளியே போக முடியாம போச்சு. மார்ச் மாதம் கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ அரிசி கொடுத்தார். அதன் பிறகு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
நாங்க தண்ணீரை குடிச்சிட்டுக்கூட இருந்துக்கிறோம். ஆனால் மாடுகள் என்ன செய்யும், தீவனம் இல்லாமல் கஷ்டப்படுகின்றன. கோரப்புல்லை மாடுகள் சாப்பிடாது. வேறு வழியில்லாமல் அதை தான் இப்போது மாடுகளுக்கு போடுகிறோம்.
சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஜெய்கனேஷ் கூறுகையில், எங்கள் காலனியில் 20 நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. நாங்கள் மீனாட்சியம்மன் கோவில், பாண்டிகோவில், கோரிப்பாளையம், மார்க்கெட் பகுதிகளில் பாசி, மாலைகள், சீப்பு, டாலர், கயிறு வியாபாரம் செய்து வருகிறோம். இதில் தினமும் ரூ.200 வரை கிடைக்கும்.
ஊரடங்கால் எங்கும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் 4 முதல் 6 பேர் வரை உள்ளனர். ரேசன் கடையில் கொடுத்த அரிசியை கொஞ்ச நாள் காப்பாற்றியது. இப்போது சாப்பிட எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.
இதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா கூறுகையில், நாங்கள் ராமர், அனுமர் வேஷம் போட்டு வீடு வீடாக சென்ற பாட்டுப்பாடி வசூல் செய்வோம். தினமும் ரூ.200 வரை கிடைக்கும். அந்தப்பணத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்தோம். நாங்கள் 40 குடும்பங்கள் உள்ளோம்.
இப்போது வெளியே போக முடியவில்லை. வேஷம் போட்டு வெளியே போனால் தான் காசு கிடைக்கும். இப்போது வருமானம் இல்லை. 20 நாட்களுக்கு முன்பு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் பாக்கெட் தந்தனர்.
அதை வச்சு கொஞ்ச நாள் ஓட்டினோம் என்றார். டேப்பாடகர் கனவா பிச்சை கூறுகையில், ஊர் ஊராக சென்று இஸ்லாமிய பாடல்களை பாடுவது தான் எங்கள் தொழில்.
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எங்களுக்கு அரசு, தனியார் உதவ வேண்டும். இதேபோல் சாட்டையடி தொழில் செய்வோர், தாயத்து கட்டுபவர்கள், சாம்பிராணி புகை போடும் தொழில் செய்பவர்களும் உதவி எதுவும் கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT