Published : 29 Apr 2020 04:50 PM
Last Updated : 29 Apr 2020 04:50 PM
வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பின்னணியில் என்ன நடந்தது என்பதில் உண்மையை மறைத்து ராகுல் காந்தி பேசுவதாக தமிழக பாஜக செயலாளர் பேராசிரியர் ஆர்.ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கிப் பணிகள் பற்றியோ, வங்கிகள் பணியாற்றும் முறை பற்றியோ, வாரா கடன், கடன் தள்ளுபடி, கடன் தள்ளிவைப்பு... இவை பற்றிய எந்த அடிப்படையும் புரியாமல் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்களுக்கு 68, 607 கோடி ரூபாய் வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான சரியான விளக்கத்தை மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புள்ளி விவரங்களோடு ஆணித்தரமான ஆதாரங்களோடு 16 மார்ச் 2020 அன்று மக்களைவையில் (கேள்வி எண் : 305) எடுத்து விளக்கி இருக்கிறார்.
2006 முதல் 2008 வரையில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு தான் அளவுக்கு அதிகமாக வணிக நிறுவனங்களுக்கு கடன் தொகை வழங்கியதாக முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் கூறுயிருக்கிறார். இதை ஒரு வார இதழ் 11, செப் 2018 அன்று விவரமாக பிரசுரித்துள்ளது.
Prudential Writeoff - என்ற வார்த்தைக்கு வங்கி மொழியில் தள்ளுபடி என்ற பொருள் அல்ல. சர்வதேச வங்கி சேவையின் அடிப்படைகளை நாம் பின்பற்றுவதால், இது போன்ற கடன்களை வங்கி இருப்பில் இருந்து எடுத்துவிட்டு, அந்த கடன் நிலுவையை வட்டியும் முதலுமாக தீவிரமாக வசூலிப்பது தான் வங்கிகளின் நடைமுறை.
சாதாரண குடிமகன் கூட புரிந்து கொள்ளும் இந்த வங்கி நடைமுறை, ராகுல் காந்திக்கு புரியாதது ஆச்சரியமல்ல. அவர் இதைப்பற்றி எல்லாம் பேசாமல் இருப்பதே அவருக்கு நல்லது. தமிழகத்தில் சில ஊடகங்களும், பாஜக எதிர்ப்பில் ஊறித்திளைத்த சில லெட்டர் பேடு கட்சிகளும், வரிந்து கட்டிக் கொண்டு பாஜகவை விமர்சனம் செய்வது எல்லாம் அபத்தம். இதில் திமுகவின் கள்ள மௌனம் புரிந்து கொள்ள கூடியதே.
வங்கிக் கடன் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பித்த (Wilful Defaulter) நீரவ் மோடியின் சுமார் 2387 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் லண்டனில் சிறையில் இருக்கிறார். அவரது அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டு, இந்தியாவில் அவரது அனைத்து அசையும், அசையா சொத்த்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, அவரின் சுமார் 9000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் இங்கிலாந்து அவரை இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப இருக்கிறது.
வங்கிப் பணம் என்பது மக்கள் பணம். அதில் இருந்து யாரும் ஒரே ஒரு ரூபாயை கூட திருடி விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. இதில் நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் உறுதியாக இருக்கிறார். இது போன்று அவதூறுகளை பேசி, மேலும் அவமானப்படாமல் இருங்கள் ராகுல் அவர்களே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT