Published : 29 Apr 2020 04:31 PM
Last Updated : 29 Apr 2020 04:31 PM
கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவோரை நோயாளிகளாக அல்லாமல் உறவினர்களாக பாவிக்கும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் சகல வசதிகளுடன் முன்மாதிரியாக கோவிட் நல வாழ்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் காலியாக இருந்த 4 கட்டிடங்களில் கோவிட் நல மையம் ஏற்படுத்தும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
இங்கு, ஒருவர் பயன்படுத்தியதை வேறு யாரும் பயன்படுத்தாத வகையிலும், தனிமைப்படுத்தப்பட்டோர் மன உளைச்சலுக்கு ஆளாகாத வகையிலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ம.சந்திரசேரன், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
"இம்மையத்தில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொருவருக்கும் செல்போன் சார்ஜ் செய்வதற்கான பிளக்பாயின்ட், மின்விசிறி, கொசு வலையுடன் கூடிய ஜன்னல் போன்ற வசதிகளுடன் தனித்தனி படுக்கை வசதிகள் உள்ளன.
அதில், தனித்தனி குடிநீர் கேன்கள், இருக்கை, வேட்டி, லுங்கி, சட்டை, பற்பசை, பல் துலக்கும் பிரஷ், சோப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மருத்துவ உபகரணங்கள் மூலம் பரிசோதிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 பேருக்கு 1 வீதம் ஸ்மார்ட் டிவி, இசை கேட்கும் வசதியும் உள்ளது.
இதுதவிர, கண்ணாடி அறையில் இருந்து மருத்துவர்கள் மூலம் மன உளைச்சல் மேலாண்மை அளிக்கும் வசதி உள்ளது. மருத்துவர்கள் மட்டுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரும் தங்களது கருத்துகளை மைக் மூலம் தெரிவிக்கலாம். சத்தான உணவு வழங்கப்படும்.
அவரவர் படுக்கைக்கு அருகே இறை வழிபாடு செய்துகொள்ளவும், யோகா செய்யவும் 'மேட்' உள்ளது. மையத்தின் வெளியே இருப்பதைப் போன்று மையத்துக்குள்ளும் சளி மாதிரி சேகரிக்கும் அறை உள்ளது. ஒவ்வொறு தளத்திலும் தேவைக்கு ஏற்ப கழிப்பறை மற்றும் குளியலறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
படித்துவிட்டு கொண்டு செல்லும் வகையில் புத்தகங்கள், அவரவர் வாட்ஸ் அப்புக்கு தினந்தோறும் மின் நாளிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இங்கு தங்க வைக்கப்படுவோரை நோயாளிகளாக அல்லாமல் விருந்தினர்களாக பாவிக்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட் நல வாழ்வு மையானது தமிழகத்திலேயே முன்மாதிரியாக அமைந்துள்ளது. தற்போது ஒரு கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. இதேபோன்று, ஓரிரு நாட்களில் ஏனைய 3 கட்டிடங்களும் தயார் நிலைக்கு வரும். இம்மையத்தில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.
இவற்றை சமீபத்தில் பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆகியோர், கோவிட் நல மையத்தை முன்மாதிரியாக ஏற்படுத்திய மருத்துவர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் உட்பட மருத்துவம், பொதுப்பணித் துறைக் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT