Published : 29 Apr 2020 03:58 PM
Last Updated : 29 Apr 2020 03:58 PM
உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல் காப்புக்காட்டில் வேட்டை நாயைப் பயன்படுத்தி மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் அரியவகை பட்டியலில் இடம் பெற்றுள்ள வன உயிரினங்களான யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டெருமை, புள்ளிமான், முயல், மயில், மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த வன உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு காப்புக்காடுகளில் தீவிரக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல் காப்புக்காட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:
''தமிழ்நாடு - கர்நாடக இருமாநில எல்லையில், காவிரி ஆற்றை ஒட்டியவாறு உரிகம் வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனச்சரகத்தில் பிலிகல், உரிகம், கெஸ்தூர், தக்கட்டி, மல்லஹள்ளி, மஞ்சுகொண்டனப்பள்ளி ஆகிய 6 காப்புக்காடுகள் அடங்கியுள்ளன. இந்தக் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பீர்னப்பள்ளி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வனவிலங்கு வேட்டையில் பயன்படுத்த வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் வகையில் பிலிகல் காப்புக்காடு, கோட்டையூர் பிரிவு, பீர்னப்பள்ளி உட்பிரிவு பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காட்டில் வேட்டையாடிய மானைக் கொன்று இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மான் வேட்டையில் ஈடுபட்டது பீர்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (60), நாராயணன் (33) மற்றும் தொட்டமுத்தன் (45) ஆகிய 3 பேர் என்பதும், தாங்கள் வளர்த்து வந்த வேட்டை நாய் மூலமாக மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனத்துறையினர் விசாரணையின்போது தப்பிச் சென்ற தொட்டமுத்தன் பின்பு கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில் வேட்டை நாயைப் பயன்படுத்தி மானை வேட்டையாடிய குற்றத்துக்காக சீனிவாசனுக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் இருவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்டால் வனத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT