Published : 29 Apr 2020 03:23 PM
Last Updated : 29 Apr 2020 03:23 PM
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். ஆனால், மற்ற நாட்டில் சிக்கியவர்களை மீட்ட இந்திய அரசு வளைகுடா நாடுகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்க மறுப்பது ஏன் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியர்களை சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனி விமானம் மூலம் திரும்ப அழைத்து வந்த மத்திய பாஜக அரசு, வளைகுடா நாட்டில் வாழுகிற இந்தியத் தொழிலாளர்களை தமிழகம் அழைத்துவர மறுப்பது ஏன்?
அந்நியச் செலாவணி வருமானத்தில் 40 சதவீதத்தை வெளிநாடுகளில் வாழுகிற இந்தியத் தொழிலாளர்கள் மூலமாக மத்திய அரசுக்கு வருகிறது. தற்போது துன்பத்தில் இருக்கும் அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு அலட்சியம் காட்டுவது ஏன்?
வளைகுடா நாடுகளில் வாழும் 85 லட்சம் இந்தியர்களில் குறிப்பாக தமிழர்கள் கரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப விரும்புபவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து விமானம், கப்பல் வழியாக திரும்ப அனுப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள், கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அந்தந்த நாடுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏற்கெனவே ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்பதற்கு இந்திய அரசு விமானச் சேவைகளை வழங்கி உதவி செய்துள்ளது.
ஆனால், வளைகுடா நாடுகளில் ஏறத்தாழ 85 லட்சம் இந்தியர்கள், குறிப்பாக கேரளம், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்கள். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பல்வேறு துறைகளில் இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வருகிற அந்நியச் செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் இந்தியத் தொழிலாளர்கள் மூலமாக மத்திய அரசுக்கு வருகிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 741 கோடி அனுப்பியுள்ளனர். ஆனால், இவர்களின் வாழ்க்கைத் தரம், பணிச்சுமை, தொழிலாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை பின்பற்றப்படாமல் கடும் துன்பத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை இந்திய வெளியுறவுத்துறைக்கு 11,501 புகார்கள் வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலாளர்கள் மூலம் வந்துள்ளன. அதேபோல கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 33,988 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.
இவர்களது புகாரையோ, இறந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையையோ பெற்றுத் தருவதில் மத்திய பாஜக அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்து வருகிறது. கடந்து 2004 ஆம் ஆண்டில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது வெளிநாட்டில் பணிபுரிகிற இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தத் துறையின் அமைச்சராக வயலார் ரவி பொறுப்பேற்று பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் 2016-ம் ஆண்டில் இந்த துறையை வெளியுறவுத்துறையோடு இணைத்து அதன் தனித்தன்மையை இழக்கவேண்டிய நிலையை பாஜக அரசு உருவாக்கியது.
அதற்கு பிறகு வெளிநாட்டில் வாழ்கிற இந்தியர்கள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்ற இந்தியர்களின் பிரச்சினையை வெளியுறவுத்துறை கவனிப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் கரோனா தொற்று காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
கரோனா தொற்று நோயைப் பரிசோதிக்கவோ, சிகிச்சை பெறவோ வாய்ப்பில்லாத நிலையில் மிகுந்த மன உளைச்சலோடு வாழ்ந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு இழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்த நாடுகளில் இருக்கிற இந்தியத் தூதரகங்களோ, மத்திய, மாநில அரசுகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் சிறிய அறைகளில் 30க்கும் மேற்பட்டோர் தங்கவேண்டிய நிலை உள்ளது. நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கிற இடங்களில் ஒரு சில கழிவறைகள்தான் உள்ளன. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அடிப்படை அம்சமாக உள்ள சமூக விலகலை இவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை.
எனவே, இந்தியத் தொழிலாளர்களை முறையான மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவு தெரிந்த பிறகு தனி விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் பவன் கபூரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அவரோ, "இந்த நிலையில் இங்கேயே இருப்பதுதான் பாதுகாப்பு. ஏனெனில் இந்தியாவில் முழு ஊரடங்கு இருப்பதால் இப்போது அங்கு உங்களை அனுப்பமுடியாது" என்று பதில் கூறியது வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் வளைகுடா நாட்டில் வாழுகிற இந்தியர்களை குறிப்பாக தமிழர்களைத் தாயகம் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக பிரதமர் மோடியின் கவனத்திற்கு இப்பிரச்சினையை தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும். இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர ஏர் இந்தியா விமானங்களையோ, கடற்படை கப்பல்களையோ பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT