Published : 29 Apr 2020 12:32 PM
Last Updated : 29 Apr 2020 12:32 PM
தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்க விதைப்புக் கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்யலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
‘கரோனா’ ஊரடங்கால் தற்போது விவசாயப் பணிகளுக்கு நோய் தொற்று பரவும் அச்சத்தில் ஆட்கள் வராததும், உரிய காலத்தில் அணைகளிலிருந்து நீர் விடுவிக்கப்படாததும், தமிழகத்தில் தற்போது நெல் சாகுபடி பெரும் சவாலாக உள்ளது.
அதனால், சாகுபடிச் செலவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை குறைப்பதற்கும், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் சேற்றில் நேரடி நெல் விதைப்பு செய்வது சிறந்தது என விவசாயிகளுக்கு மதுரை வேளாண் அறிவியல் நிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் செல்வரானி கூறியதாவது:
நேரடி நெல் விதைக்கும் கருவியில் 4 உருளை வடிவ விதைப் பெட்டிகள் உள்ளன. இந்த விதைப்பெட்டிகளில் 20 செ.மீ இடைவெளியில் இரண்டு வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இக்கருவியை ஒருவர் இழுத்துச்செல்ல கைப்பிடி ஒன்று உள்ளது. இக்கருவி சேற்றுழவு செய்யப்பட்ட நன்செய் நிலங்களில் முளைக்கட்டிய நெல் விதைகளை வரிசைகளில் விதைப்பதற்கு பயன்படுகிறது. நடவுமுறை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களை நேரடி நெல் விதைப்பு சாகுபடிக்கும் பயன்படுத்தலாம்.
கருவி மூலம் சேற்றில் நேரடி நெல் விதைப்பு செய்யும் போது கீழ்க்கண்ட பயிர்சாகுபடி முறைகளில் அதிக கவனம் செலத்தினால் நேரடி நெல் விதைப்பு பெரிய வெற்றியைத் தரும். இந்த விதைக்கு கூலி ஆட்கள் தேவையில்லை.
நேரடி நெல் சாகுபடியில் பெரும் சவாலாக இருப்பது களைகள். எனவே ஒருங்கிணைந்த களை மேலாண்மை மூலம் களையைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்.
சேற்றில் நேரடி நெல் விதைப்புக்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் நெருக்கமாக இருக்கும். அதனால், நாற்றுக்களைக் களைந்து வெற்றிடங்களில் நடவு செய்தல் வேண்டும்.
இந்த தொழில்நுட்பங்களை சிறந்த முறையில் கடைப்பிடித்தால் சேற்றில் நேரடி நெல் விதைப்பு வெற்றிகரமாக அமைத்து நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்றதாக அமையும்.
விதைக்கருவி மூலம் விதைப்பதால் விதையளவு குறைகிறது. 25 முதல் 30 சதவீத அளவு விதைகளைச் சேமிக்க முடியும். ஒரு நாளில் இரண்டு ஆட்களைக் கொண்டு 2.5 ஏக்கர் வரை விதைப்புக் கருவி கொண்டு விதைப்பினை மேற்கொள்ள முடியும்.
விதைக்கருவியினைக் கொண்டு சீரான இடைவெளியில் விதைப்பதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். செடியின் வரிசைகளில் களை எடுப்பது எளிதாக உள்ளது.
நாற்று நடவு தவிர்க்கப்படுவதால் ஆட்செலவு பெருமளவில் குறைகிறது. (ஏக்கருக்கு சுமார் 18 ஆட்கள் வரை) நடவுப் பயிரை விட ஏழு முதல் 10 நாட்கள் முன்பே அறுவடைக்கு வந்து விடும். கொரோனா நெருக்கடியான இந்த சுழலில் வழக்கமாக நடவு செய்வதற்கு பதிலாக விதைப்புக் கருவி கொண்டு சேற்றில் நேரடி நெல் விதைப்பு செய்யும் தொழில் நுட்பத்தின் மூலம் தண்ணீர் மற்றும் ஆட்கள் தேவையைக் குறைத்துநடவுமுறை சாகுபடிக்கு நிகரான நெல் மகசூல் பெறமுடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT