Published : 29 Apr 2020 12:42 PM
Last Updated : 29 Apr 2020 12:42 PM
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நதி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கான நியாயமான தண்ணீரைப் பெறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், வாரியம் என்ற பெயரை ஏற்க மறுத்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்துடன் போராடி தண்ணீர் பெறுவதைவிட, இந்த ஆணையத்தின் மூலமாக நமது தேவைகளை ஓரளவு பெற முடிந்தது.
இதன் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தாலும், இரு மாநிலங்களுக்கிடையிலான சர்ச்சைகள் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கிவந்த காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு நதிநீர் ஆணையங்களையும் மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நதி நீர் ஆணையங்களின் உருவாக்கம் மற்றும் பின்னணிக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உருவாக்கத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. எனவே அனைத்தையும் சமமாகப் பாவித்து ஒரே முடிவை எடுப்பது ஏற்புடையதல்ல.
நீர்வள அமைச்சகத்துடன் காவிரி மேலாண்மை ஆணையம் இணைக்கப்பட்டாலும், அதன் தன்னாட்சி உரிமைகள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது. ஆனாலும் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பைத் தருவது நியாயமாக இருக்காது.
தவிர, ஓர் அமைச்சகத்தின் கீழ் காவிரி நதி நீர்ப்பகிர்வு விவகாரத்தைக் கொண்டுபோவது, இந்தப் பிரச்னையைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” .
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT