Published : 29 Apr 2020 12:01 PM
Last Updated : 29 Apr 2020 12:01 PM

முழு ஊரடங்கு இன்று இரவுடன் நிறைவு: நாளை என்ன நிலை?- முதல்வர் பழனிசாமி புது அறிவிப்பு

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைவதால் நாளை என்ன நிலை என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக அதிக அளவில் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் குடிசைப்பகுதிகளிலும் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. சென்னை தவிர மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள கோவை, மதுரை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி (இன்று) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் அடித்துப் பிடித்து பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

இந்நிலையில் இன்று இரவுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. நாளை 4 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க அலைமோதலாம் என்பதால், நாளை மேற்கண்ட மாநகராட்சிகளில் என்ன நிலை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொட்ர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (புதன்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், நாளை (வியாழக்கிழமை) மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x