Published : 29 Apr 2020 11:46 AM
Last Updated : 29 Apr 2020 11:46 AM
மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். பல்வேறு நாடுகளில் துன்பத்தில் தவித்த கேரள மாநிலத்தவர் திரும்பி வருவதற்கு கேரள அரசு எப்படி ஏற்பாடு செய்திருக்கிறதோ, அதே நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர் 1 கோடியே 26 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் ஏராளமாக சிக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள தின வருவாய் அடிப்படையில் செயல்படும் முடி திருத்துநர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருமானமின்றி வாடி நிற்கின்றனர், அயல்நாடுகளில் சிக்கி இருப்போர், வெளி மாநிலங்களில் சிக்கி இருப்போர் தமிழகம் திரும்ப வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
''கடந்த ஒரு மாத கால முடக்கத்தால், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர். அதிலும் குறிப்பாக முடி திருத்துநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தலைச்சுமை வணிகர்கள் ஆகியோர் வேறு எந்தவிதமான வருமானத்திற்கும் வழி இல்லாமல் துயர நிலையில் இருக்கின்றனர். திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் சுருங்கி விட்டதால், படக்கலைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கவில்லை. பகுதிநேர செய்தியாளர்கள் அமைப்புகளில் இல்லை என்பதால், செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் அவர்களுக்கு இல்லை.
மும்பை வீதிகளில் தலைச்சுமை வணிகம் செய்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கரோனா தாக்கி இறந்து விட்டார்கள். அவர்களுடன் தங்கியிருந்த பலர், உரிய மருத்துவம், உணவு, தங்கும் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். ஒவ்வொரு வேளை உணவும் அவர்களுக்குப் போராட்டம்தான். அங்குள்ள தமிழர்களின் உதவியோடு நாட்களைக் கடத்துகின்றார்கள். நாடு திரும்ப வழி இல்லை. நாளை வான் ஊர்திகள் பறந்தாலும் பயணச்சீட்டு வாங்குவதற்கு அவர்களிடம் காசு இல்லை.
இதுபோல பல்வேறு நாடுகளில் துன்பத்தில் தவித்த கேரள மாநிலத்தவர் திரும்பி வருவதற்கு கேரள அரசு எப்படி ஏற்பாடு செய்திருக்கிறதோ, அதைப் பின்பற்றியாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT