Last Updated : 29 Apr, 2020 11:36 AM

1  

Published : 29 Apr 2020 11:36 AM
Last Updated : 29 Apr 2020 11:36 AM

கிரண்பேடிக்கு எதிராக கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தர்ணா

தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ளதாகக் கூறி கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

இந்நிலையில், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 14 தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்துக்குப் பணிக்குச் சென்ற நிலையில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலானது. இதையடுத்து, ஆந்திரத்தில் பல ஊர்களில் இருந்து சொந்த ஊரான ஏனாம் பகுதிக்குத் திரும்பும்போது அவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களை 24 மணிநேரத்துக்குள் ஏனாம் பிராந்தியத்திற்குள் அனுமதிக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்திருந்தார்.

ஏனாம் திரும்பியோர் மழையிலும் வெயிலிலும் ஆந்திர எல்லைப் பகுதியில் காத்திருந்தனர். மத்திய அரசு உத்தரவுப்படி செயல்படுவதாக ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கேபினட் செயலரை முதல்வர் நாராயணசாமி தொடர்பு கொண்டார். ஏனாம் வந்தோரை தனிமைப்படுத்தி அதன்பிறகு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் செயல்படலாம் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நேற்று (ஏப்.28) இரவு நடந்த பேரிடர் கூட்டத்தில் முடிவு செய்து அவர்களை ஏனாம் வருவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

பூங்காவில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள்

இதையடுத்து, ஏனாம் தாவரவியல் பூங்காவுக்கு 13 பேரும் நேற்று இரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்குப் படுக்கை, உணவு வசதி செய்து தரப்பட்டது. ஆனால், இந்தப் பூங்கா தற்போது ஆந்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்புப் பணியில் ஏனாம் போலீஸார்தான் உள்ளனர். அங்கு 50 ஏக்கர் பகுதிகளைப் பூங்காவாக மாற்றும் பணியை ஆந்திர அரசுதான் செய்கிறது. அத்துடன் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை ஆந்திர மாநில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்குக் கருப்பு உடையுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வந்தார். அவர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அறைக்குச் சென்று பார்த்து மனு தந்தார். அதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் கேட்டதற்கு, "ஏனாம் மக்களை இன்னும் அனுமதிக்கவில்லை. தற்போதும் ஆந்திரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில்தான் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அத்துடன் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார். இது தொடர்பாக மனு தந்துள்ளேன். ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்து தர்ணாவில் உள்ளேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x