Published : 29 Apr 2020 11:23 AM
Last Updated : 29 Apr 2020 11:23 AM
தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட வேளாண்மை அலுவலர் ஆர்.சக்திவேல் கூறியதாவது:
"நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ் எனப்படும் நெல் இலைச் சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் நெற்பயிரில் தென்படுகிறது. பயிர்களின் இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருத்தல், இலைகளின் பச்சை நிற திசுக்களை புழுக்கள் சுரண்டுவதால் மாறி காய்ந்திருந்தல், தீவிர தாக்குதல் இருப்பின் நெல் வயலும் வெளிரி காணப்படுதல், இலைகள் நீள வாக்கில் சுருண்டு அதற்குள் புழுக்கள் காணப்படுதல் போன்றவை இப்புழுக்களின் தாக்குதலுக்கு நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகும்.
இலைச் சுருட்டுப்புழுக்களின் முட்டையானது தட்டையாகவும், முட்டை வடிவத்திலும், மஞ்சள் வெள்ளை நிறங்கள் கலந்த கலவையாகத் தென்படும். புழுக்கள் பச்சை நிறத்தில், முன்பகுதி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும்.
கூட்டுப் புழுக்களின் ஆயுள் 7-10 நாட்களாகும். முதிர்ந்த அந்துப் பூச்சிகள் பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும். அவற்றில் கருப்பு கோடுகளும், நடுப்பகுதியிலும் இறக்கையின் ஓரத்தில் கருப்புப் பட்டை போன்ற கோடுகள் தென்படும்.
வயல் வரப்புகளைச் சுத்தமாக்கி வைத்துக் கொள்ளுதல் இப்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி. பின்னர் வயலில் உள்ள புல்வகை களைகளை பறித்து அப்புறப்படுத்த வேண்டும். சேத அளவைப் பொறுத்து ஃபெனிட்ரோத்தியான் 50 இ.சி. அல்லது மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ்.எல்., மருந்துகளை ஹெக்டேருக்கு 1,000 மி.லிட்டர் என்ற அளவிலும் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பாசலோன் 35 இ.சி. மருந்தை ஹெக்டேருக்கு 1,500 மி.லிட்டர் என்ற அளவிலும் அல்லது குயினால்பாஸ் 25 இ.சி. மருந்தை ஹெக்டேருக்கு 1,000 லிட்டர் அளவிலும், டைக்லோரோவாஸ் 76 மருந்தை ஏக்கருக்கு 250 மி.லி. என்ற அளவிலும் தெளிக்கலாம்.
'டிரைக்கோகிராம்மா கிலோனிஸ்' என்ற முட்டை ஒட்டுண்ணிகளை நெற்பயிர் நடவு செய்த 37, 44, 51 நாட்களில் 3 முறை ஹெக்டேருக்கு 1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும். பின்னர் ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் காலை நேரத்தில் கட்டி வைக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாற்றை ஹெக்டேருக்கு 25 லிட்டர் அளவிலும் அல்லது வேப்பெண்ணெய்யை 3 சதவீதம் அளவுக்கு தெளிக்க வேண்டும்.
சைடோரினஸ் லிவிடி பென்னீஸ் என்ற நெற்பயிர் நாவாய்ப் பூச்சியின் முட்டைகளை 50-75 என்ற அளவில் விட வேண்டும். விளக்குப்பொறிகளை வைத்து இலைச் சுருட்டுப் புழுக்களின் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். 5 ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறியாவது வைக்க வேண்டும். தழைப் பருவத்தில் பூச்சியுண்ணும் பறவைகள் வயலில் நிற்பதற்கேற்ப ஹெக்டேருக்கு 40-50 பலகைகளை கட்டி வைக்க வேண்டும். மேலும், மயக்கப் பொறிகளை ஹெக்டேருக்கு 10-12 என்ற அளவில் வைக்க வேண்டும். இவ்வாறான முறைகளைப் பின்பற்றி நெற்பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தி, உற்பத்தி இழப்பை தவிர்க்கலாம்"
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT