Published : 29 Apr 2020 09:49 AM
Last Updated : 29 Apr 2020 09:49 AM
புதுச்சேரியில் புற்றுநோய் பாதித்து உடல்நிலை மோசமான நிலையில் இருந்த தாயைப் பார்க்க 480 கி.மீ. தொலைவு தனது மனைவியுடன் தனித்தனி சைக்கிள்களில் பயணித்து வந்தார் மகன். அவரை பார்த்த சிறிது நேரத்தில் தாய் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகே ஏனாம் பிராந்தியம் உள்ளது. இங்கு உள்ள பலர் பணிக்காக அருகாமையுள்ள பல நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஏனாம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனு, தனது மனைவி லட்சுமியுடன் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இவரது தாய் லட்சுமி புற்றுநோயாளி. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழலில் லட்சுமியின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரது உறவினர்கள் மகனுக்குத் தகவல் தந்தனர். பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லை. கார் வைத்து வர வசதியில்லை.
இச்சூழலில் தனது மனைவி லட்சுமியுடன் தனித்தனி சைக்கிள்களில் ரேவு ஸ்ரீனு ஏனாம் பிராந்தியத்திற்கு புறப்பட்டு வந்தார். வழியில் இத்தம்பதியை போலீஸார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், தனது தாய் புற்றுநோயால் மிகவும் பாதிப்பில் உள்ளதால் அவரை காண செல்வதாக கூறியவுடன், போலீஸார் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
வழியில் மக்களும் உதவிய நிலையில், 480 கி.மீ. தொலைவு பயணத்தைக் கடந்த 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நள்ளிரவு முடித்து ஏனாம் வந்தடைந்தனர்.
வெளிமாநிலத்தில் இருந்து ரேவு ஸ்ரீனு, லட்சுமி இருவரும் ஏனாம் வந்ததால் அவர்களை அதிகாரிகள் கரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர்.
அப்போது அவரது தாயின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் கடந்த 18-ம் தேதி தாயை பார்க்க மகனை அனுமதித்தனர். தனது மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே தாயின் உயிர் பிரிந்தது. தாயாருக்கு இறுதிச்சடங்கை செய்த பின்பு அவர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமுக்குத் திரும்பியுள்ளார்.
அதன் பிறகு பல்வேறு ஊர்களில் நடைபயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு வந்த 13 பேரை அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவைக் காட்டி அனுமதிக்க மறுத்ததால் ஆந்திர எல்லையில் காத்திருந்தனர். இச்சூழலில் மத்திய கேபினட் செயலர் வரை பேசி இவர்களை அனுமதிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு அத்தியாவசிய பணி நிமித்தமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடைபயணம், சைக்கிள் பயணம், இருசக்கர வாகனத்தில் பயணம் ஆகியவற்றை பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் தங்கள் குடும்பத்தினரை காணத்தான்.
ஆனால் வேறு மாநிலத்தில் பணியாற்றினாலும் சொந்த ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது தவறானது எனவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதித்து அனுமதிக்கும் வகையில் திருத்தம் தேவை என்றும் கோருகின்றனர் சமூக அமைப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT