Published : 29 Apr 2020 09:28 AM
Last Updated : 29 Apr 2020 09:28 AM
ஜெயங்கொண்டம் அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியை மாணவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரூ.1,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ஏப்ரல் மாதத்துக்கு இலவசமாக மாநில அரசு வழங்கியது.
அதேபோல், மாவட்ட நிர்வாகம் காய்கறி தொகுப்புகளை குறைந்த விலைக்கு மக்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் ஏழை, எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படக் கூடாது என உணவாகவோ, பொருளாகவோ பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை, தனது மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்கி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள துப்பாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிபவர் கண்ணகி (45). இவர், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் தனது மாணவர்களின் பெற்றோர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்துள்ளார்.
இதனையடுத்து, தனது பள்ளியில் பயிலும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 62 மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கியுள்ளார். மேலும், அனைவரிடமும், அரசு அறிவிக்கும் நடைமுறைகளாக சமூக விலகல், தனிமை படுத்துதல் உள்ளிட்டவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
சளி,இருமல் உள்ளிட்ட எந்த பிரச்சினை வந்தாலும் மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் தனது மாணவர்களின் குடும்பங்கள் கஷ்டப்படக்கூடாது என நினைத்து உதவி கரம் நீட்டியுள்ள சம்பவம் பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், ஆசிரியை பணியை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT