Published : 28 Apr 2020 07:48 PM
Last Updated : 28 Apr 2020 07:48 PM
தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் பொது நிகழ்ச்சிகள், சுபகாரியங்களில் மக்கள் கூட தடை நீடிக்கும் நிலையிருப்பதால் வருமான இழப்பு ஏற்படும் அபாயத்தை நாதஸ்வர, தவில் கலைஞர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும்போது இத் தொழில்களும் படிப்படியாக முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நம்பிக்கை தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது.
ஆனால் அந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள் நாதஸ்வர, தவில் கலைஞர்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு சீஸன் காலம் இருக்கிறது.
அந்த வகையில் நாதஸ்வர, தவில் கலைஞர்களின் தொழில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் சிறப்பாக இருக்கும். அத்தகைய சீஸன் காலத்தில் தான் தற்போது ஊரடங்கு அமலாகி அவர்களது தொழிலை முற்றிலுமாக முடக்கியிருக்கிறது.
இந்த 3 மாதங்களில்தான் கோயில் விழாக்கள், கும்பாபிஷேகம், கொடை நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும். இதுபோல் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெறும்.
ஏப்ரல், மே மாத கோடை விடுமுறையில் பெரும்பாலா சுபநிகழ்ச்சிகளை பலரும் நடத்துவார்கள். இந்த சுபநிகழ்ச்சிகளால் நாதஸ்வரம், தவில் இசைக்கும் கலைஞர்களின் பிழைப்பு நடந்துவந்தது.
இந்த சீஸனில் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் ஆண்டு முழுக்க செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பல கலைஞர்களுக்கு இருக்கிறது. கரோனாவால் இந்த ஆண்டு எந்த பொதுநிகழ்ச்சிகளும், சுபநிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இதனால் இத்தகைய கலைஞர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ். மணிகண்டன், பொதுசெயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் கூறும்போது, இந்த 3 மாத நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களில் இருந்து அளிக்கப்பட்டிருந்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி சென்றுவிட்டார்கள்.
பல கலைஞர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது. நலவாரியத்தில் பெரும்பாலான கலைஞர்கள் பதிவு செய்யவில்லை என்பதால் அரசின் உதவி தொகையும் கிடைக்கவில்லை. ஊரடங்கு முடிவுக்குவந்தபின் பல்வேறு தொழில்களும் மீண்டும் தொடங்கி நடைபெறும்.
ஆனால் எங்களது தொழிலுக்கு வாய்ப்பில்லை. கரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும்வரை பொதுநிகழ்ச்சிகளுக்கும், பலர் கூடும் சுபநிகழ்ச்சிகளுக்கும் தடை நீடிக்கும் என்பதால் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. வருமான இழப்பு எத்தனை மாதங்களுக்கு நீடிக்குமோ தெரியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT