Published : 28 Apr 2020 07:30 PM
Last Updated : 28 Apr 2020 07:30 PM
தனது அன்னை இறந்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்து முடித்த அடுத்த நொடியே, தான் பார்க்கும் துப்புரவுப் பணிக்குத் திரும்பி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் அய்யாத்துரை.
பெரம்பலூர் அருகேயுள்ள வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் அய்யாத்துரை. முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாயார் அங்கம்மாள் திடீரென மரணமடைந்தார். அவருக்குத் தங்கள் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார் அய்யாத்துரை.
இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்ததும் வீடு திரும்பிய அய்யாத்துரை, அங்கும் செய்ய வேண்டிய சிறு சம்பிரதாயச் சடங்குகளைச் செய்து முடித்துவிட்டு அடுத்த நிமிடமே பணிக்குக் கிளம்பினார். பணியில் இருந்த மற்றவர்களுடன் சேர்ந்து கிருமிநாசினி தெளித்து அன்றைய பணிகளைச் செய்து முடித்தார்.
அன்னை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல் அன்றைய தினமே பணிக்கு வந்த அய்யாத்துரையை அதிகாரிகள் பாராட்டி நெகிழ்ந்தார்கள்.
இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இவருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வனும் அய்யாத்துரையை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
இன்று காலை வழக்கம்போலப் பணியில் இருந்த அய்யாத்துரையை அவர் வேலை செய்யும் ஊரான வி.களத்தூருக்கே நேரில் சென்று சால்வை அணிவித்துப் பாராட்டி நிதியும் அளித்தார் இளம்பை தமிழ்ச்செல்வன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இளம்பை தமிழ்ச்செல்வன், “தனது தாய் இறந்த துக்கத்தைவிட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிப் பணிக்கு வந்தவரை அவர் இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று மரியாதை செலுத்துவதுதான் அவரது கடமை உணர்வுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று நினைத்தேன். அதனால் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு மட்டுமல்லாமல் என்ன தேவை இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம் என்று சொல்லி எனது அலைபேசி எண்ணையும் அளித்துவிட்டு வந்திருக்கிறேன். இவரைப் போன்று அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால் கண்டிப்பாக கரோனாவைக் காத தூரம் விரட்டி அடித்து விடலாம்" என்றார்.
"அம்மாவை இழந்த துக்கம் பெருசுதான். ஆனா, கரோனா நோய்த் தொற்று குறித்து எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அம்மா இறந்த துக்கம் நமக்குத்தான். அதுக்காக மக்கள் பாதிக்கப்படக் கூடாதுன்னு உடனே வேலைக்கு வந்துட்டேன். எல்லாரும் இந்த நேரத்துல சுயநலமா இருக்காம பொதுநலனை மனசுல வெச்சுக்கிட்டுச் செயல்படணும்" என்கிறார் அய்யாத்துரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT