Published : 28 Apr 2020 04:05 PM
Last Updated : 28 Apr 2020 04:05 PM
தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து வெளியிட்டுள்ள அரசாணைகளை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்.232-ன் படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 30.06.2021 வரை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
அதே போன்று அரசாணை எண்.48-ன் படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்துக்கு தக்கவாறு மத்திய அரசு கணக்கிடும் விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாகும்.
தற்போது நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் கரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை காரணம் காட்டி அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல.
மத்திய அரசை பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இந்த செயல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 18 மாதங்களுக்கு விலைவாசி புள்ளியை 01.07.2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 34 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஒரு மாத காலத்திலேயே மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடிய அளவுக்கு நிலைமை உருவாகி உள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் ஸ்திரத்தன்மையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும், தமிழகத்தில் கரோனா நோய் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையும் ரத்து செய்துள்ள கரோனா கொடுமையை விட மிகப்பெரிய கொடுமையாகவே பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து வெளியிட்டுள்ள அரசாணைகளை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT