Published : 28 Apr 2020 02:49 PM
Last Updated : 28 Apr 2020 02:49 PM

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோவில்பட்டி 

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வெ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன், வட்ட உதவிச்செயலாளர் முத்துராஜ் ஒன்றியக்குழு உறுப்பினர் பா.பரமேஸ்வரி ஆகியோர் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் மனு வழங்கினர்.

அதில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நலவாரியங்களான அமைப்புசாரா, கட்டுமான நல வாரியம் போன்ற வாரியங்களில் பதிவு செய்த மற்றும் புதுப்பிக்க தவறிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நிவாரண தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.

கரோனா தொற்று நோயால் நாட்டில் பிற தொழில்களை போல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு உரிய விலைக்கிடைக்காததால், விளை நிலத்திலேயே அப்படியே விட்டுவிட்டனர்.

இதனால் விளைபொருட்கள் அழுகும் நிலை உருவாகி உள்ளது. எனவே, விவசாயிகளின் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

எட்டயபுரம் வட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து மாத்திரைகள் இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, மருத்து தட்டுப்பாடில்லாமல் நோயாளிகளுக்கு வழங்கவும், மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான விதை, உரம் மற்றும் உழவு போன்ற விவசாய நடவடிக்கைகளுக்ககான மானியங்கள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, மானியங்கள் மற்றும் பயிர்காப்பீடு தொகைளை தாமதமின்றி வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x