Published : 28 Apr 2020 11:27 AM
Last Updated : 28 Apr 2020 11:27 AM
கரூர் திருவள்ளுவர் மைதானத்திற்கு மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.
கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி மொத்த விற்பனை நடைபெற்று வந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நான்கைந்து கடைகள் அமைத்துக் கொள்வது, சில்லரை விற்பனையில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் கடை போடுபவர்கள் உழவர் அடையாள அட்டை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்காததால் கரூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மொத்த காய்கறி விற்பனை மார்க்கெட் கடந்த 4 நாட்களுக்கு முன் மூடப்பட்டது. அதன் பின் கடந்த 3 நாட்களாக மினி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதிக கூட்டம் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாததால் மொத்த காய்கறி விற்பனை சந்தை கரூர் திருவள்ளுவர் மைதானத்திற்கு நேற்று (ஏப்.27) மாற்றப்பட்டது. மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதால் நேற்று மாலை முதலே பிரம்மதீர்த்தம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வாகனங்கள், வியாபாரிகள் குவிந்தனர்.
போலீஸார் 7 மணிக்கு வியாபாரிகளுக்கு அனுமதியளித்ததை அடுத்து அவர்கள் திருவள்ளுவர் மைதானத்தில் வியாபாரிகள் விற்பனையைத் தொடங்கினர். அவர்களிடம் சில்லரை வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இங்கு மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 35-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி சந்தைகளும், விவசாயிகள் கடை வைக்கவும் அனுமதிக்கப்பட்டது. இங்கு அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் காய்கறிகள் விற்பனை நேற்று நடைபெற்றது.
கரூர் நகராட்சி ஆணையர் சுதா கூறுகையில், "கரூர் பேருந்து நிலையத்தில் இடவசதி குறைவு என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வசதியாக மொத்த காய்கறி சந்தை திருவள்ளுவர் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் செயல்படும். வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT