Published : 27 Apr 2020 06:52 PM
Last Updated : 27 Apr 2020 06:52 PM
ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்ததால் ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்பாமல் அதிகளவில் தங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் - கீழச்செல்வனூர், சித்திரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சராணலயங்கள் உள்ளன.
இச்சரணாலயங்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வரத் தொடங்கும் கடந்த 2016 முதல் 2018 வரை மாவட்டத்தில் பருவ மழை இல்லாததால் வெளிநாட்டுப் பறவைகள் வருகையும் குறைந்திருந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் கடந்த அக்டோபர் முதல் வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வரத் தொடங்கின
மாவட்டத்தில் உள்ள மற்ற சரணாலயங்களைவிட நயினார்கோவில் செல்லும் வழியில் உள்ள தேர்த்தங்கல் கண்மாய் பறவைகள் சரணாலயத்திற்கு இந்தாண்டு 25,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்தன.
இங்கு நாட்டுக்கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்ய வசதியாக உள்ளது.
மேலும் கண்மாயின் நடுவில் வனத்துறையினர் சிறு குளங்கள் வெட்டி தண்ணீரை தேக்கியுள்ளனர். குளங்களிலும், கண்மாயிலும் மீன் குஞ்சுகள் விட்டுள்ளனர். அதனால் பறவைகளுக்கு இரையும் கிடைக்கிறது.
தற்போது இங்கு சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டுப் பறவைகளான நத்தை கொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கருநீல அரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, கரண்டிவாயன் நாரை, சோலைக்குருவிக் கூட்டம், கருநீல அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவை கள் அதிகளவில் வந்திருந்தன.
இப்பறவைகள் ஜனவரி, பிப்ரவரியில் புறப்பட்டு மீண்டும் தங்கள் தாய் நாட்டுக்குச் சென்றுவிடும். ஆனால், தற்போது தேர்த்தங்கலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கம் செய்த குஞ்சுகளோடு தங்கியுள்ளன.
கண்மாயில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதும் அவற்றில் இரை கிடைப்பதால் கடும் வெயில் சுட்டெரித்தாலும் பறவைகள் இங்கு தங்கியுள்ளன என வனத்துறையினர் கூறுகின்றனர்.
தற்போது கரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இல்லாததால் பறவைகள் சாலையோர மரங்களிலேயே அதிகம் தங்கியுள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT