Published : 27 Apr 2020 04:45 PM
Last Updated : 27 Apr 2020 04:45 PM
ஊடரங்கு காலத்தில் ஏழைகளின் பசியைப் போக்க, பலரும் பல வழிகளில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், தங்களிடம் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவியுள்ளனர் கோவை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
இதுதொடர்பாக கோவை ஒத்தக்கால்மண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ப.மூர்த்தி கூறியதாவது:
"முதலில் 'பசிப்பிணி போக்குவோம்' எனும் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி, விருப்பமுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களை இணைத்து நிதி திரட்டினோம். முதல்கட்டமாக எங்களிடம் பயிலும் மாணவர்களில் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தயாரித்தோம். அனைத்து ஆசிரியர்களும் இதற்கு உதவினர்.
பின்னர், ஒரு வாரத்துக்கு வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், ரவை, சேமியா, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உதவியுடன் பொட்டலமிட்டோம். பின்னர், அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்தோம்.
இதன்மூலம் செட்டிபாளையம், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, ராயக்கவுண்டனூர், தொப்பம்பாளையம், ஒத்தகால்மண்டபம், குமாரபாளையம், சொலவம்பாளையம், அரசம்பாளையம், ஒக்கிலிபாளையம் பகுதிகளில் வாழும் 360 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. பயன்பெற்றவர்களில், கிணத்துக்கடவு அருகே இம்முடிபாளையம் என்ற கிராமத்தில் ரேஷன் அட்டை இல்லாத 60 ஏழை குடும்பங்களும் அடங்கும்.
இந்த பணிக்காக குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை 60 ஆசிரியர்கள் நிதி அளித்தனர். இதுவரை மொத்தம் ரூ.1 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
மன நிறைவான இந்தப் பணிக்கு, எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் கோ.ரமேஷ், ஆசிரியர் லிட்வின், குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கரலிங்கம், அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆkசிரியர் விமல் உள்ளிட்ட ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், ஒத்தகால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர்.
இதுவரை 4 கட்டங்களாக மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளோம். தேவைப்படுவோருக்கு 5-ம் கட்டமாக வழங்கவும் முயன்று வருகிறோம்"
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT