Published : 27 Apr 2020 02:21 PM
Last Updated : 27 Apr 2020 02:21 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கரோனா சிறப்பு மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டதாலும், டயாலிசிஸ் பிரிவில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாலும் 11-ம் தேதி மதுரைக்கு வந்தார் தா.பாண்டியன். மதுரை உசிலம்பட்டியில் உள்ள தன் சொந்த வீடு, அச்சம்பத்து பகுதியில் உள்ள கட்சித் தோழர் ஜீவாவின் வீடு ஆகிய இடங்களில் தங்கி, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார் அவர். வீட்டில் ஓய்வாக இருக்கிற நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடும் வகையில், 'கொரோனாவும் முதலாளித்துவமும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் தா.பாண்டியன்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கோ நாளைக்கோ எழுதி முடித்துவிடுவேன். வெளியீட்டு விழா நடத்த முடியாது என்பதால், கட்சித் தோழர்களிடம் கொடுத்துப் பரவலாகக் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிக் கேட்டபோது, "இதுவரைக்கும் எத்தனையோ கிருமிகள் படையெடுத்து மனித குலத்தைத் தாக்கியிருக்கின்றன. அதற்கெல்லாம் மருந்து கண்டுபிடித்து மீண்டு வந்திருக்கிறோம். ஆனால், நம்முடனே இருக்கிற இன்னொரு மனித குலத்துக்கு எதிரான கிருமி நம்முடைய சமூக அமைப்பு. அதுதான் முதலாளித்துவம். மிக மோசமான கிருமிகளால்கூட 1 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டது இல்லை.
ஆனால், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் மட்டும் கொல்லப்பட்டவர்கள் 6 கோடி. அதைச் செய்தது யார்? இன்னமும் செய்யக் காத்திருப்பவர்கள் யார்? போர்க் கப்பல், பீரங்கிகள், போர் விமானங்கள், அணுகுண்டுகளை வாங்கிக் குவித்தார்களே, அதை வைத்துக் கிருமிகளை அழிக்க முடிகிறதா; மக்களைப் பசியாற்ற முடிகிறதா? ஒரு போர்க்கப்பலைக் கட்டுகிற செலவில் எத்தனை மருத்துவமனைகளைக் கட்டலாம்? இதுவரையில் ராணுவத்துக்குச் செலவிட்ட பணத்தை எல்லாம் சுகாதாரம், கல்விக்குச் செலவிட்டிருந்தால் மக்கள் வாழ்வு எப்படியிருந்திருக்கும்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிற நூலாக இது இருக்கும்.
கரோனாவை ஒழிப்பதற்கு விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயலட்டும். முதலாளித்துவ சமூக அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும்" என்றார் தா.பாண்டியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT