Published : 27 Apr 2020 01:56 PM
Last Updated : 27 Apr 2020 01:56 PM

மதுபான லாரிகளை புதுச்சேரி மாநில நிர்வாகம் அனுமதிக்காவிட்டால் மதுபான நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்

எஸ்.நீலவண்ணன்/செ.ஞானபிரகாஷ்

ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ள மதுபான லாரிகளை புதுச்சேரி மாநில நிர்வாகம் அனுமதிக்காவிட்டால் மதுபான நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பப்படும் என, விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவை ஏராளமான விலைக்கு விற்கப்படுவதாகவும் அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். இதையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் 21- ம் தேதி கோவா மாநிலத்தில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் மதுபானங்கள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு, புதுச்சேரிக்குக் கிளம்பின. அடுத்த நாளே தமிழக எல்லையான ஓசூரை அடைந்ததும், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் அந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தினர்.

அனுமதிக் கடிதம் பெற்ற குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு லாரிகளில் கொண்டு வந்த மதுபானத்தைச் சேர்க்க வேண்டும் என்பது கலால் துறை விதி. அதைக் காரணம் காட்டி, அங்கிருந்து மதுபான லாரிகளை புதுச்சேரிக்கு எடுத்து வரும் அனுமதியைப் பெற்றனர். இவற்றைக் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லையான பட்டானூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் கூறும்போது, "ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் சாலைகளில் நிற்கிறோம். ஊரடங்கில் மது திருட்டு நடந்து வரும் சூழலில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எங்களுக்கும், லாரிகளுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றனர்.

இச்சூழலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "புதுச்சேரிக்கு வெளியே கோரிமேடு எல்லையில் 11 லாரிகள் மதுபானங்களுடன் நிற்பதாகத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறை விசாரித்துக் கடிதம் அனுப்பியது.

விழுப்புரத்திலுள்ள 11 லாரிகளை தனது அதிகார வரம்புக்குள் வைத்துக்கொள்ளவும் போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதேபோல் லாரி மற்றும் அதிலுள்ள பொருட்களின் உரிமைதாரர்கள், உரிமையாளர்களுக்கும் போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "புதுச்சேரி அரசு இந்த லாரிகளை அனுமதிக்காவிட்டால், மதுபானம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x