Published : 27 Apr 2020 01:40 PM
Last Updated : 27 Apr 2020 01:40 PM
பழநி மலைக்கோயிலில் வசித்துவந்த குரங்குகள் பக்தர்கள் வராததால் உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உணவுதேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநிமலைக்கோயிலில் ஏராளமான குரங்குகள் வசித்துவருகின்றன. இவற்றிற்கு பக்தர்கள் கொடுக்கும் உணவுகளை வாழ்வாதாரமாக இருந்துவந்தது.
இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னதாகவே கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு நீடிப்பதால்
பழநி மலைக்கோயிலில் வசித்த குரங்குகள், பக்தர்கள் வருகை இல்லாததால் உணவிற்கு தவித்து வந்தன. இந்நிலையில் இவை உணவு தேடி மலையில் இருந்து இறங்கி குடியிருப்புபகுதிகளுக்குள் புகத்தொடங்கின.
வீட்டு மாடிகளில் துவைத்து காயப்போடும் துணிகளை எடுத்துச்செல்வது, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பறித்துச்செல்வது என மக்களுக்கு தொல்லை தந்துவருகிறது.
இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். கூண்டு அமைக்கப்பட்டு குரங்குகள் விரும்பி உண்ணும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டது.
ஆனால் எந்த குரங்கும் கூண்டுகளுக்குள் சிக்கவில்லை. வனத்துறையினரின் நோக்கம் அறிந்து கூண்டுக்குள் குரங்குகள் சிக்காமல் கூண்டுவைத்த பகுதியில் இருந்து வேறுபகுதிக்கு இடம்பெயரத்தொடங்கிவிட்டன.
குரங்குளை ஏமாற்றி பிடித்துவிடலாம் என நம்பிய வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குரங்குகளை படிப்படியாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT