Published : 27 Apr 2020 01:12 PM
Last Updated : 27 Apr 2020 01:12 PM
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய்களின் அகவிலைப்படியை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியம் பேரமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பேரமைப்பின் தலைவர் டி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை முடக்கம் செய்யும் மத்திய அரசின் முடிவு தன்னிச்சையானது, நியாயமற்றது.
இது ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையையே கடுமையாக தாக்குவதாகும். ஓய்வூதியர்கள் என்பவர்கள் வாழ்வின் இறுதிநிலையில் இருப்பதால் அவர்கள் தொற்று தாக்காத பாதுகாப்பான நிலையில் உள்ளனர் என்று கூற முடியாது.
அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கம் / விலைவாசி உயர்வை ஈடுசெய்வதற்கான எளிய இழப்பீடு. கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு / பணவீக்கம் உண்மையான ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியத்தினை மதிப்பிழக்கச் செய்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிதி மந்தநிலைக்கு பயனற்ற, தேவையற்ற மற்றும் வீணான செலவினங்களால் ஏற்பட்டது. பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு கடனை செலுத்துவதற்கு காலக்கெடு நீடிப்பு, கடன்கள் தள்ளுபடி போன்ற சலுகைகள் தாராளமாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். கொரோனா தொற்று பரவலை திறம்பட கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு ஊழியர்களின் நீடித்த கடின உழைப்பை இழக்க முடியாது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் அகவிலைப்படி உயர்வு முடக்கம் நியாயமற்றது.
இதனால் கரோனா தொற்று நோய் விரட்டலுக்கான கூடுதல் செலவினங்களுக்கான நிதித் திரட்டலுக்கு மத்திய அரசு மாற்று வழிகளை ஆராய வேண்டும்.
எனவே, அகவிலைப்படி முடக்கம் என்பதை திரும்பப் பெறவும், விலைவாசி உயர்விற்கேற்ற அகவிலைப்படி உயர்வுகளை உரிய நேரத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரா்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT